மானுடம் உருவாகும்போது...
நாராயணன் மாஸ்டரைத் தேடிக் கொண்டு அவர் அறைக்குப் போகிற அனேக பையன்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அவருக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு. நிர்வாகக் காரணம் முன்னிட்டு.
மிகவும் பாதிக்கப்பட்டது நாராயணன் மாஸ்டர் அல்ல; சிதம்பரம்தான். அவன் ப்ளஸ்டூ படிக்கிறவன். மாஸ்டருக்குப் பிரதம சீடன்.
“சார்... இதை நாங்க விடப் போறதில்லை... இன்னிக்கு ஸ்ட்ரைக் பண்ணப் போறோம். பள்ளிக்கூடமே கொதிச்சிட்டிருக்கு.”
நாராயணன் அவன் அன்பை மெச்சுவது போல சின்ன சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்.
“இது எச்.எம். சூழ்ச்சி சார்! பி.கே. எம்மை விட்டு அவர்தான் பெட்டிஷன் தட்டி விட்டுட்டு, பின்னாலேயே போய் உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஏற்பாடு பண்ணியிருக்கார்.”
நாராயணன் மாஸ்டருக்கு அவன் தேவையில்லாமல் பெரிய பேச்சுப் பேசுவதாகத் தோன்றியது. சிதம்பரம் குமுறுகிறான். புரிந்தது. இன்று வெறும் குமுறலோடு நிற்கிற இவனைப் பத்தாவதில் நாராயணன் மாஸ்டர் கலகக்காரனாகச் சந்தித்திருந்தார்.
அவனுக்கு மூக்கணாங்கயிறு போட்டு மடக்கி, படிமானத்துக்குக் கொண்டுவர இரண்டு ஆண்டு பிடித்திருக்கிறது அவருக்கு.
“சரி. அப்படியே வச்சுக்க! ஸ்ட்ரைக் பண்ணி என்ன சாதிக்கப் போறே?”
“இப்படியே மகாத்மா காந்தி மாதிரி பேசிப் பேசியே எங்களைக் கோழையாக்கிட்டீங்க சார்!”
சிதம்பரம் இன்னும் கூட ஓவராக அவருடன் பேசுவான்; பேசியிருக்கிறான். இதற்கெல்லாம் பாதிக்கப்படுகிறவர் அல்ல நாராயணன் மாஸ்டர்.
“நான்தான் நாளைக்குப் போயிடப்போறேனே!”
நாளையிலிருந்து நீ வீரன். விடுதலை பெற்ற வீரன் என்று நினைவுறுத்துகிற தோரணையில் அவர் சொன்னார்.
வையவன் சிறுகதை
“சார்!” அவன் கலங்கிவிட்டான். கொடுத்த அடியை அவர் மௌனமாக வாங்கிக் கொண்டது மட்டுமின்றி இனி உங்களுக்கு நிர்ப்பந்தமில்லை. நான் போகச் சித்தமாகி விட்டேன். இரண்டு ஆண்டுகளாக என் மீது நீங்கள் காட்டிய மரியாதைத் தொல்லைக்கு நன்றி. இப்படி என்னென்ன அர்த்தமெல்லாமோ தென்படுகிற மாதிரி ஒரு பார்வை. ஒரு சிரிப்பு.
“சார்...” என்று மறுபடியும் சொன்னான் சிதம்பரம் குரல் கம்மியிருந்தது. தலை கவிழ்ந்தான். நிமிரும்போது கண்கள் கலங்கியிருந்தன.
“சரி... கிளாஸுக்குப் போ! எனக்கு ரிலீவிங் ஆர்டர் ரெடியாயிட்டிருக்கு. நான் ஆபீஸ் ரூம் போறேன்!”
“இன்னிக்குப் பௌர்ணமி சார்!”
“ஹைக்கிங் தானே? உண்டு. அஞ்சரை மணிக்குப் பசங்களை ரெடி பண்ணி ரூமுக்குக் கூட்டிட்டு வந்துடு. அஞ்சே முக்காலுக்கு மலை அடிவாரம். கடைசி ஹைக்கிங். விட்டுடக் கூடாது.”
விட்டால் சிதம்பரம் அங்கேயே அழுது விடுவான் போலிருந்தது. முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டினார்.
“இதுதான் கோழைத்தனம்!”
“சார்...” என்று தடுமாறினான் சிதம்பரம்.
“கிளாஸுக்குப் போ.”
அதற்கு மேல் நாராயணன் மாஸ்டர் அங்கே நிற்கவில்லை. அலுவலக அறை நோக்கி விறுவிறு வென்று நடந்தார்.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் பக்கத்திலிருந்த மலைக்குப் பையன்களோடு ஹைகிங் போகிற மாதிரி அன்றும் அவர் காத்திருந்தார். முதலில் வருகிற சிதம்பரம் வரவில்லை.
ரகுபதிதான் வந்தான்.
பர்ஸைத் திறந்த ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். பேசவில்லை.
பொரிகடலை, மிக்சர், பக்கோடா எல்லாம் வாங்கி வர வழக்கம் போல் என்ற அதற்குப் பொருள்... ரகுபதிக்குப்புரிந்தது.
ஆனால் அவன் நோட்டை வாங்கவில்லை.
“இல்லே சார்... இன்னிக்கு நாங்கதான் வாங்கப் போறோம்.”
நோட்டை வைத்துக் கொண்டே ஒரு கணம் யோசித்தார்.
“ஓ.கே! இதுக்கு வாழைப் பழம் வாங்கி வா.”
மீண்டும் அவன் தயங்கினான்.
“சொல்றேன் இல்லே” என்று அவர் புருவத்தை நெறித்தார். அவன் மறு பேச்சின்றி நோட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினான்.
ஐந்தரை வரை சிதம்பரம் வரவில்லை. வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நாராயணன் மாஸ்டர் புறப்பட்டார். பையன்கள் பின் தொடர்ந்தனர்.
வழக்கமாக வழியெல்லாம் பாட்டும் பேச்சும் சிரிப்புமாக ஒரே கலகலப்பாக இருக்கும். இன்று நிசப்தம், மௌன ஊர்வலம் போல.
“கோபி, ஒரு பாட்டு பாடேண்டா!”
“மூடில்லே சார்.”
“ஜெகன், என்னடா பேஸ்த் அடிச்ச மாதிரி வர்றான்?”
“சார் நாங்க எல்லாம்நொந்து போயிருக்கோம்!”
“நம்பாட்டா விட்டுருங்க!”
நாராயணன் மாஸ்டருக்கு நெஞ்சு விம்மியது. ஒரு கணம்தான். அவரும் சாதாரண மனிதன்தான் என்று நினைவூட்டுவது போல். அவர் சமாளித்துக் கொண்டார்.
அன்பு ஓர் உரம்தான். பலவீனப்படுத்தும் சக்தி அல்ல. புரிந்து கொண்டிருந்த அவருக்கே இது சிரமமாக இருந்தது.
மலையடிவாரத்தில், மொட்டைப் பாறை மீது எதிரில் ஒரு குட்டையில் கல்லெறிந்து கொண்டிருந்த சிதம்பரம் தென்பட்டான்.
“சிதம்பரத்துக்கு ரூமுக்கு வரப் பிடிக்கலேடா கோபி!” என்று கிண்டல் செய்தார் மாஸ்டர்.
அவன் எழுந்து கொண்டான்.
தன் குரல் தனியாக ஒற்றை ஒதுக்கத்தில் விலகி நிற்பதை
உணர்ந்தவாறு மலையேறிக் கொண்டே நாராயணன் மாஸ்டர் பேசிக் கொண்டு போனார்.
“சிதம்பரம் இன்னிக்கு என்ன சொன்னான் தெரியுமா? நான் மகாத்மா காந்தி மாதிரி பேசிப் பேசியே ஒங்களையெல்லாம் கோழையாக்கிட்டேனாம்!”
யாரும் பதில் தரவில்லை.
“அவன் சொன்ன உதாரணம் தப்பு! காந்திஜி பேசி யாரும் கோழை ஆகலை.”
“சார்...” என்று இடைமறித்து என்னவோ சொல்லப் போனான் சிதம்பரம்.
“இரு நான் முடிச்சுடறேன்! எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்திருக்கு. நான் அரசு ஊழியன். கிளம்புன்னா கிளம்பியாகணும். இவன் ஸ்ட்ரைக் பண்றேன்றான். அதுக்கெல்லாம் மசிந்து என் ட்ரான்ஸ்ஃபர் உத்தரவு ரத்து ஆயிடாது. என்ன சாதிக்கப் போறீங்கன்னு கேட்டதுக்கு இந்த பதில் சொல்றான்...”
மலைப்பாதை நெட்டுக் குத்தாக வளர்ந்து கொண்டு போயிற்று. அரை மணி நடந்தால் ஒரு மைதானத்தில் மேடை போட்ட மாதிரி ஒரு பாறை அடுக்கு வரும். நிலா வெளிச்சம். நல்ல காற்று. மூலிகை மணம் கமழும் காற்று, அங்கேதான் போய்க் கொண்டிருந்தார்கள்.
“ஜெகனுக்கும் சிதம்பரத்துக்குத் தாண்டா ஒங்கள் எல்லோரையும் விட என் மேலே அதிக கோபம் இருக்கும்.”
ஏன் எதற்கு என்று யாரும் கேட்கவில்லை.
“டென்த்லே அவங்க பெஞ்சை ஒடச்சுக்கிட்டு இருந்தப்போ நான்தான் கையைக் கட்டிக்கிட்டு அவங்களை வேடிக்கை பார்த்தேன்!”
பிறகு அவர்கள் எதிரிலேயே ஓர் ஆசாரியைக் கூப்பிட்டு ரிப்பேர் செய்வித்து, அந்தக் கூலியைத் தன் கையிலிருந்து கொடுத்ததை அவர் சொல்லவில்லை.
“ஐ திங்க்... அவங்களுக்கு எது எது மேலயோ ஆத்திரம்! அதையெல்லாம் தீர்த்துக்கணும்னா, இந்த நாராயணன் மாஸ்டர் வேற பேசிப் பேசி அறுக்கறார்னு ஒரு பொறுமல்... இல்லே ஜெகன்?”
ஜெகன் முகம் உர்ரென்றிருந்தது. திரும்பிப் பார்க்காமலேயே அவருக்கு அது அப்படித்தான் இருக்கும் என்று தெரியும்.
“சார்... நீங்க எது வேணும்னாலும் பேசுங்க!”
எல்லோரும் சூம்பிப் போயிருந்தனர், இன்று ஹைக்கிங் இருந்திருக்க வேண்டாம் என்று நினைப்பது போல. ஆனால் நாராயணன் மாஸ்டருக்கு அது அவசியப்பட்டது. இவர்கள் தன்னைப் பிரிவது போல தான் இவர்களைப் பிரிவதும் வருத்தமான விஷயம்.
அந்த வருத்தம் கொண்டாடிக் கொள்கிற கண்ணீர்க் காட்சியாக இருப்பதில் அவருக்குச் சம்மதமில்லை. அது ஒரு மகிழ்ச்சியின் முத்திரையோடு முடிவுற வேண்டும். அதற்கும் மேல்... அதற்கும் மேல்...
அதைப் பாறை அடுக்கின் மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு கட்டியவராக அவர் நடந்தார்.
“ரகுபதிக்கு அவங்க பெற்றோர் அவன் டாக்டரோ இன்ஜினீயரோ ஆயுடணும்னு கொடயறதிலே ஆத்திரம். லோகுவுக்கு அவன் இஷ்டப்படி சினிமா வீடியோ பார்க்கவிட மாட்டேங்கறாங்கன்னு ஆத்திரம். கணபதிக்கு அவன் ரசிகர் மன்றத்திலே தலையிடக் கூடாதுன்னு தடுக்கறாங்களேன்னு ஆத்திரம். பொதுவா எல்லாருக்கும் படிங்கடா படிங்கடான்னு எப்பப் பார்த்தாலும் எல்லாரும் கழுத்தை அறுக்கிறாங்களேன்னு பெரிய ஆத்திரம். இல்லையா?”
எல்லோரும் மௌனமாக நடந்தனர். லோகு மட்டும் தாள முடியாமல் பேசினான்.
“இப்பிடிப் பேசிட்டே இருந்துட்டு நீங்க எங்களையெல்லாம் விட்டுட்டு நாளைக்குக் கௌம்பிடுவீங்க.”
“நானாவா போறேன்?”
பாதை ஒரு பாம்பு வளைசல் வளைந்தது.
“நீங்களா அனுப்புறீங்க?”
“நாங்க எங்க எதிர்ப்பைக் காட்டறோம் சார். எங்களை விடுங்க.”
“காட்டினா அதுக்கு என்ன அர்த்தம் வரும் தெரியுமா?”
“நீங்க எதிர்க்கச் சொன்னீங்கன்னு யாராவது சொல்வாங்க.”
“அதுதான் ஈஸியாச் சொல்லிடலாமே! அதுக்கு மேல ஒண்ணு இருக்கே அதை யாராவது யோசிங்க.
“இப்பவே வேணாம். மேடைப் பாறையிலே சொன்னாப் போதும். அட என்னாங்கடா... என்னமோ மௌன ஊர்வலம் வந்துகிட்டிருக்கீங்க... ஜெகன் நீ பாடப் போறதில்லே... இல்லே?”
ஜெகன், சார் என்று மாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது என்று புரிந்து கொண்டு நெளிந்தா
“சரி போங்கடா... நானே பாடறேன்” என்று சற்றும் தயங்காமல் நாராயணன் மாஸ்டர் பாடத் தொடங்கினார். பாரதி பாட்டு.
“காலமாம் வனத்தில் அண்டக் கோல மாமரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவி வரும் வண்டு...”
கணீரென்ற குரல். மலை ஏற்றத்தையோ மூச்சிரைப்பையோ காட்டாத குரல். ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா’வையும், ‘கேன்யூ கெட் மீ எ லாஃபிங் லீடை’யும் பாடுகிற அதே ஈடுபாடு தோய்வு.
கொஞ்ச தூரம் போனதும் பையன்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஒருவர் மாற்றி ஒருவர் என்று சினிமாப் பாட்டுகளைப் பாட ஆரம்பித்து விட்டார்கள். சிதம்பரம் தவிர.
மேடைப் பாறை வரும்போது நிலா உதித்து விட்டது. வெளிச்சம் பாறையைக் கழுவி மெழுகிக் கொண்டிருந்தது.
நாராயணன் மாஸ்டரைச்சுற்றிப் பையன்கள் உட்கார்ந்தனர். ரகுபதி பொட்டலங்களைப் பிரித்து ஆளுக்குக் கொஞ்சம் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வந்தான். அதற்கு அடுத்து ஜெகன் வாழைப் பழத்தை ஒவ்வொன்றாகக் கொடுத்தான்.
அது முடிந்ததும் வாட்டர் பாட்டில் தண்ணீர் எல்லாருக்கும் ஒரு வலம் வந்தது.
எல்லாம் முடிந்து காற்று மெல்ல வீசத் தொடங்கிய போது நாராயணன் மாஸ்டர் பேச ஆரம்பித்தார்.
“சிதம்பரத்துக்கு இப்ப எது மேலடா ரொம்ப ஆத்திரம்... சொல்லு?”
“எது மேலேயும் இல்லே சார்!” என்று சிதம்பரம் சொன்னான்.
“நிஜம்மா?”
“நிஜமா சார்.”
“ஸ்ட்ரைக் பண்றேன்னியே.”
“இப்ப இல்லே சார்.”
“ஏன்?”
“தப்புன்னு தோணிப் போச்சு.”
“எப்படி?”
மேடைப் பாறை வரையில் ஒத்திப் போட்டிருந்த செய்திக்காக அவர் தூண்டில் போட்டார்.
சிதம்பரம் பதிலளிக்கவில்லை.
“வேற யாராவது?”
கூட்டத்தில் ஒரு யோசனை மேகம் கவிந்தது.
“நீங்க என்னவெல்லாம் சொல்லிட்டு இருந்தீங்களோ அதுக்கு மரியாதை இல்லாம போயிடும் சார்!” ஜெகன் சொன்னான்.
“கிட்டத்தட்ட சரி! தெளிவா யாராவது சொன்னா நல்லா இருக்கும்.”
மீண்டும் யோசித்தார்கள்.
அவர்களுக்கு வாய்ப்பளிக்கிற மாதிரி இரண்டு நிமிடம் விட்டுப் பின்னர் நாராயணன் மாஸ்டர் சொன்னார்.
“உங்களை எல்லாம் நான் ஏன் நேசிச்சேன், நேசிக்கறேன்னு ஒங்க எல்லாருக்கும் தெரியுமா?”
“சொல்லுங்க சார்!”
“ஜஸ்ட் உங்களுக்காகத்தான். வேற பிரதிபலன் எதிர்பார்த்து இல்லே.”
“...”
“வழியிலே வர்றப்ப சொன்னேனே... நீங்க எல்லாம் எது எதுமேலயோ ஆத்திரமாயிருக்கீங்க... ஒங்களை எல்லாரும் புடிச்சு ஜெயில்லே தள்ளிட்டாப்பிலே சங்கிலியிலே மாட்டிட்டாப்பிலே ஒரு கோபம் இருக்கு இல்லே.”
“ஆமாம் சார்!” ஒரு கோரஸ் வந்தது.
“இதுக்கெல்லாம் பேஸிக்கா இருக்கிறது ஒங்க மேல உண்மையான அன்பு யாருக்கும் இல்லேன்ற ஏக்கம் தான். அதான் என்னை அட்ராக்ட் பண்ணியது! ஆனா உண்மை என்ன தெரியுமா?”
“...”
“உங்களை நீங்களே போதுமான அளவு நேசிக்கலே.”
“புரியலே சார்...”
“இப்ப புரியாட்டி பரவால்லே. நிதானமா யோசிச்சா... நாள் கணக்கிலே மாசக் கணக்கிலே நெனச்சுக்கிட்டே இருந்தா புரிஞ்சுடும். எங்கிட்ட நீங்க பிரியமா இருக்கீங்களே... இதுதான் நீங்க ஒங்களோடயே நேசமா இருக்கறதுக்கு சாம்பிள். இதை நான் பயன்படுத்திட்டா ரொம்ப ரொம்ப சீப் ஆயிடுவேன்.”
அவர்களுக்கு மூடுபனியின் ஊடே ஓர் உருவம் புலப்படுவது போல் என்னமோ புரிந்தது.
“எனக்கு என்னமோ இந்த ட்ரான்ஸ்பர்லே எந்த வருத்தமும் இல்லாத மாதிரியும், ஒங்களை எல்லாம் விட்டுட்டுப் போறதிலே கவலையே இல்லாத மாதிரியும் தோணலாம். எனக்கும் வருத்தமா இருக்கு. வெறுப்பாக் கோவமாகக் கூட இருக்கு...”
கூட்டம் அவரையே வெறித்துப் பார்த்தது.
“எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம்னா ஒரு முடிவு உண்டு.
இங்கே வந்தேன். ஒங்களையெல்லாம் பார்த்தேன். பழகினேன். இப்போ ஒரு முடிவு வந்திருக்கு. “இதை ஏன் எதிர்க்கணும்... நானோ எனக்காக நீங்களோ தாறுமாறா ஏதாவது செஞ்சா என்ன பலன்?”
அவர் தோள்களை உலுக்கிக் கொண்டார். ஒரு பெருமூச்சு விட்டார். கைகளை விரித்தார்.
“ஒரு பலனும் வராது. எனக்குக் கெட்ட பேர் வர்றதை விட எதையோ என்னத்துக்காகவோ இழந்துட்ட வருத்தம்தான் எனக்கு மிஞ்சும்.” நாராயணன் மாஸ்டர் அந்த ‘எனக்கு’ வை அழுத்திச் சொன்னார்.
சிதம்பரம் குறுக்கிட்டான்.
“நீங்க ரொம்ப அடக்கி வாசிக்கறீங்க சார்.”
“என்ன தப்பு? பெருக்கி வாசிக்கறதை விட அடக்கி வாசிக்கிறது மேல் இல்லே.”
எல்லோரும் சிரித்தனர்.
“இன்னும் கூட ஒங்களுக்கு நான் சரியா எக்ஸ்ப்ளெய்ன் பண்ணேனான்னு தெரியலே” என்று தயங்கினார்.
“சார்... சார்... க்ளாஸ் எடுக்கறீங்க சார்!” என்று ஜெகன் குறுக்கே கத்தினான்.
“ஆமாம்... லெட் இட் பீ... கடைசி கிளாஸ்...”
மௌனம் நிலவிற்று.
“நீங்க டாக்டர் ஆகிறதோ இஞ்சினீயர் ஆகறதோ அமைச்சர் ஆகறதோ கலெக்டர் ஆகறதோ எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்துவிடாது. நீங்க அதெல்லாம் ஆகணும்னு நான் எதிர்பார்க்கலே. ஆய்ட்டீங்கன்னா அதனாலே வருத்தப்பட்டுற மாட்டேன். நீங்க அதுக்கும் மேலே மேன்மையான மனுஷங்களானீங்க; அதுக்கு எங்கியோ நான் ஒரு சின்னத் தூண்டுதலா இருந்திருக்கேன்னா அப்ப தான் என் சந்தோஷம் உண்மையா இருக்கும்.”
கூட்டத்தில் உணர்ச்சிகளை மீறி எதுவோ ஒரு கனம் வந்து அழுத்திற்று.
மறுநாள் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நாராயணன் மாஸ்டரை வழியனுப்ப சிறு கூட்டம் நின்றிருந்தது. எல்லாரும் பையன்கள். சிதம்பரம் நடுவில் நின்றிருந்தான்.
ரயில் வந்தது. சாமான்களை ஏற்றி அவர் ஸீட் பிடித்து உட்கார்ந்தார். வெளியே பல கரங்கள் ஆடின. இரண்டு கைகள் மட்டும் கூப்பியிருந்தன. அது சிதம்பரம். ரயில் புறப்படுகிற வரை கூட கும்பிட்ட கை கும்பிட்ட மாதிரியே நின்றான்.
நாராயணன் மாஸ்டரும் கும்பிட்டார்.
மானுடம் உருவாகும் போது அதை வணங்கித்தானே ஆக வேண்டும்?

No comments:
Post a Comment