Wednesday 16 March 2016

ஒரு விற்பனையாளனின் மரணம்

ஒரு விற்பனையாளனின் மரணம்

அமெரிக்கா, அதிநவீனமானவை அனைத்தின் தாயகம். எல்லையற்ற சுதந்திரத்தின் இருப்பிடம், ஓய்வு ஒழிவின்றித் தோன்றும் புதுப்புதுப் பரிசோதனைகள் பலவற்றின் பிறப்பிடம்.
அங்கே போட்டியும் தர நிர்ணயமும் எப்போதும் உச்சகட்டத்தில் தான் இருக்கும் பழமையின் பெருமைக்கோ, கலாசாரத்தைக் கட்டிக் காத்த அதன் நெடிய உழைப்பிற்கோஅங்கே பெரிய மதிப்புக்கள் ஏதுமில்லை. ஒன்று பழம் பெருமை வாய்ந்தது என்பதற்காக அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு சிரமப்பட அமெரிக்க மனோபாவம் இடம் தராது.
போட்டியும் மனிதாபிமானமும் மோதும் யுத்த களத்தில், என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் நாவல்களும் நாடகங்களும் அமெரிக்க இலக்கியத்தில் ஏராளம்.
                                                              

டென்னஸ்ஸி வில்லியம்ஸ்
டென்னஸ்ஸி வில்லியம்ஸ் எழுதிய “ஆசை என்னும் தெருவண்டி”A street car named desire"



ஆர்தர் மில்லர் எழுதிய “ஒரு விற்பனையாளரின் மரணம்” (Death of a salesman) ஆகிய இரண்டும் காலத்தால் அழிக்க முடியாத அமர சிருஷ்டிகள்.
இவ்விரண்டு நாடகங்களில் ஆர்தர்மில்லரின் “ஒரு விற்பனையாளரின் மரணம்” தான், மாறி வருகின்ற நவீன யுகத்திற்கு என்றென்றும் பொருந்தும் நாடகம்.
                                                                         
                                                        ஆர்தர்மில்லர்
ஒரு பிரபலமான வணிக நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனையாளராக இருந்த வில்லிலோமன் தனக்கு வயது அதிகமாய் விட்ட காரணத்தால், தான் பணியாற்றும் நிறுவனம் தன்னை ஒதுக்கித் தள்ள முனையும் அதிர்ச்சியில்தான் நாடகம் தொடங்குகிறது. அந்த வீழ்ச்சியை அவர் மனம் லேசில் ஏற்க மறுக்கிறது.



அவர் அளவற்ற அன்பு வைத்திருக்கும் மகன் பிஃப், கற்பனையில் மிதக்கும் உதவாக்கரை என்பதை அறியாது அவனை வெற்றிகரமாக உருவாக்கித்தான் தன் வீழ்ச்சியை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று அவர் முயற்சிக்கிறார்.
அவனோ புஸ்வாணமாகி, அவர் கனவுகளைச் சிதைக்கிறான். இறுதியில் தற்கொலை என்று பிறர் எளிதில் சொல்லி விடாத முறையில், வில்லியம் லோமன் தற்கொலை செய்து கொள்கிறார்.
இரண்டு அங்கங்களில், இதயத்தை உலுக்கும் முறையில் ஆர்தர் மில்லர் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறார்.
கத்தி வீச்சு போல் பாயும் சொற்செட்டுள்ள கூர்மையான வசனம், ஆங்காங்கே ஷேக்ஸ்பியரின் கவித்வப் பண்புக்கு இணையாகச் சொல்லத்தக்க மொழிநயம்.
தன் தோல்வியை ஏற்க முடியாத, அதே சமயம் ஏற்பதை தவிர வேறு விதியறியாத கதாநாயகனாக வில்லியம் லோமனை உருவாக்கி பழைய கிரேக்க நாடகங்களின் துன்பியல் (tragic hero) தலைவனை நினைவூட்டுகிறார்.
வில்லியம் லோமன், ஒரு நல்ல மனிதர். மதிப்பு வாய்ந்த மனிதர் ஆனால் அடிப்படையில் அவர் ஒரு விற்பனையாளன். அந்த விற்பனையாளனின் தத்துவத்திலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
அண்டை வீட்டுக்காரர் சார்லி ஏறக்குறைய வில்லியம் லோமன் அவரது நிறுவனத்தால், விரட்டப்பட்ட சூழ்நிலையை அறிந்து அவருக்கு தான் தொடங்கிய ஒரு சுமாரான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி கூறுகிறார்.
ஆனால் வில்லி லோமனால் அதை ஏற்பது தாழ்ந்துவிட்ட மாதிரி இருக்கிறது. தன்னைப் போலவே ஒரு விற்பனையாளனாக வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது ஒரு நிறுவன அதிபராகிவிட்ட அடுத்த வீட்டுக்காரனிடம் வேலை செய்வதோ? அதுவும் வெறும் ஒருசுமாரான நிறுவனத்தில்?
இல்லை, முடியாது. வில்லி லோமனுக்கு எல்லாம் பெரிதாய் இருக்க வேண்டும். மிகப்பெரியது, மிக மிகப் பெரியது, மிகச்சிறந்தது. அடுத்த ஆளை, அடித்து நொறுக்கக்கூடிய அளவு வலிமை வாய்ந்த நிறுவனம். அதுதான் அவர் பணி செய்ய உகந்தது.
பாவம் வில்லியம் லோமன்! அவர்ஓர் அற்புதமான, மென்மையான, தகுதியுள்ள இன்னும் ஆற்றலும் உபயோகமும் உள்ள மனிதர்தான். ஆனால் சமுதாயம் அவரை வேறுவிதமான மாற்றியமைத்து விட்டது. அவரது விற்பனையாளர் தொழில் அவரது அரும் பாண்புகளைச் சீர்குøல்து விட்டது.
உள்ளபடியே வில்லியம் லோமனால் எவரையும் உண்மையாக நேசிக்கவும் முடியவில்லை; வெறுக்கவும் முடியவில்லை. அவர் மகத்தானவர் என்று அவர்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் நேசிக்கத் தக்கவர்கள், அப்படி இல்லையென்றால் அவர்கள் அவருடைய எதிரிகள்.
ஒரு போட்டி போடும் சமுதாயத்தில், மனித மதிப்பீடுகளை அப்பால் தள்ளி வைத்து, மாய பிம்பங்களில் சிக்குண்டு அவஸ்தைப்படுகின்ற மனித ஆன்மாவின் துயர வீழ்ச்சிதான் வில்லியம் லோமனின் வீழ்ச்சி. வில்லியம் லோமன் அற்புதமான மனிதர்தான் ஆனால் சாதாரண சோட்டா பேர் வழியாக இருக்க மனம் ஒப்பாதவர்.
அவர் லட்சியம் இந்த உலகத்திற்கு ஏதாவது சாமான்களை விற்றுக் கொண்டே, அதி உன்னதமானவனாக இந்த உலகை ஆட்சி புரிவது. வேறு வழியே இல்லை என்ற கட்டம் வரும்போது தற்கொலை ஒன்றுதான் அவரது இறுதி உச்சக்கட்டமாகிறது.
தன் சுயமதிப்பைக் கோரிய தன் முதலாளியின் மகன், சார்லி எல்லாரையும் பழி தீர்க்க அவருக்குக் கிட்டிய ஒரே ஆயுதம் தற்கொலை.
அவரது மகத்தான பிழை ஒன்றே ஒன்றுதான். எல்லா கிரேக்க, துன்பியல் நாடகங்களிலும் காணப்படுவதைப் போன்று ஒரே ஒரு தவறான மதிப்பீடுதான் இந் கதாநாயகனின் பிழைக்கும் காரணமாகிறது.
அவர் அடுத்த நபர் மெச்ச வேண்டும் என்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொண்டவர்.
இது நமது சமுதாயம் முழுவதின் பிழை. நமது சுயமதிப்பை நாம் நம்மை வைத்து அளப்பதில்லை அடுத்தவரை வீழ்த்தி, அதே சமயம் இடைவிடாமல் அவர்களது பரிபூரண ஒப்புதலை வாங்கிக் கொண்டு நம் மதிப்பை நிலைநாட்ட விரும்புகிறோம்.
தன் மகன் பிஃப் விஷயத்தில் கூட அவன் அப்படி இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார். அவன் எல்லோரையும் தகர்த்து வீழ்த்த வேண்டும்; அதே சமயம் எல்லோராலும் விரும்பப்படவும் வேண்டும். நடக்கிற கதையா இது?
இதன் விளைவாக வில்லியம் லோமன், சார்லி போன்ற அண்டை வீட்டு மனிதர் போன்றவர்களையே விரும்புவது விரும்புகிறார்; வெறுக்கவும் வெறுக்கிறார்.
நவீன மனிதன் எப்பொழுதும் கவலை பொருந்தியவனாக இருக்கிறான். இரண்டு ஈர்ப்பு சக்திகள் அவனை இழுத்த வண்ணம் இருக்கின்றன.
தன் பக்கத்து வீட்டுக்காரனை, தன் சகோதரனை அடித்து வீழ்த்த வேண்டும்; அவனை எப்படியாவது மிஞ்சி விட வேண்டும். அதே சமயம் அவனால் நேசிக்கப்படவும் வேண்டும்.
இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று, எதிரான முரண்பாடுகள். வேறு வழியின்றி அவை வீழ்ச்சியில்தான் முடிவுற வேண்டும். தன் மனப்போக்கிற்கு ஏற்ப மகன் பிஃப்பை மாற்றியமைத்தாவது அவனை போக அனுமதித்திருக்கலாம் அதிலும் தோல்வி.
அன்பும் போட்டியும் என்ற எதிரெதிர் சக்திகளுக்கு இடையே நடந்த இந்த யுத்தத்தில், தீமையும், நன்மையும் மோதிக் கொண்ட களத்தில் வில்லியம் லோமனின் ஆத்மா இருகூறாகப் பிளந்தது போன்று, தற்கொலையே முடிவாகிறது.
அமெரிக்க நாடக இலக்கியத்தில் அழியாது, மணிச்சுடர் வீசும் நாடகம் இது.
                                                                            கட்டுரை 

                                                                      வையவன் 

Tuesday 15 March 2016

மானுடம் உருவாகும்போது...

மானுடம் உருவாகும்போது...
நாராயணன் மாஸ்டரைத் தேடிக் கொண்டு அவர் அறைக்குப் போகிற அனேக பையன்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அவருக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு. நிர்வாகக் காரணம் முன்னிட்டு.
மிகவும் பாதிக்கப்பட்டது நாராயணன் மாஸ்டர் அல்ல; சிதம்பரம்தான். அவன் ப்ளஸ்டூ படிக்கிறவன். மாஸ்டருக்குப் பிரதம சீடன்.
“சார்... இதை நாங்க விடப் போறதில்லை... இன்னிக்கு ஸ்ட்ரைக் பண்ணப் போறோம். பள்ளிக்கூடமே கொதிச்சிட்டிருக்கு.”
நாராயணன் அவன் அன்பை மெச்சுவது போல சின்ன சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்.
“இது எச்.எம். சூழ்ச்சி சார்! பி.கே. எம்மை விட்டு அவர்தான் பெட்டிஷன் தட்டி விட்டுட்டு, பின்னாலேயே போய் உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஏற்பாடு பண்ணியிருக்கார்.”
நாராயணன் மாஸ்டருக்கு அவன் தேவையில்லாமல் பெரிய பேச்சுப் பேசுவதாகத் தோன்றியது. சிதம்பரம் குமுறுகிறான். புரிந்தது. இன்று வெறும் குமுறலோடு நிற்கிற இவனைப் பத்தாவதில் நாராயணன் மாஸ்டர் கலகக்காரனாகச் சந்தித்திருந்தார்.
அவனுக்கு மூக்கணாங்கயிறு போட்டு மடக்கி, படிமானத்துக்குக் கொண்டுவர இரண்டு ஆண்டு பிடித்திருக்கிறது அவருக்கு.
“சரி. அப்படியே வச்சுக்க! ஸ்ட்ரைக் பண்ணி என்ன சாதிக்கப் போறே?”
“இப்படியே மகாத்மா காந்தி மாதிரி பேசிப் பேசியே எங்களைக் கோழையாக்கிட்டீங்க சார்!”
சிதம்பரம் இன்னும் கூட ஓவராக அவருடன் பேசுவான்; பேசியிருக்கிறான். இதற்கெல்லாம் பாதிக்கப்படுகிறவர் அல்ல நாராயணன் மாஸ்டர்.
“நான்தான் நாளைக்குப் போயிடப்போறேனே!”
நாளையிலிருந்து நீ வீரன். விடுதலை பெற்ற வீரன் என்று நினைவுறுத்துகிற தோரணையில் அவர் சொன்னார்.

                                                                வையவன் சிறுகதை 
“சார்!” அவன் கலங்கிவிட்டான். கொடுத்த அடியை அவர் மௌனமாக வாங்கிக் கொண்டது மட்டுமின்றி இனி உங்களுக்கு நிர்ப்பந்தமில்லை. நான் போகச் சித்தமாகி விட்டேன். இரண்டு ஆண்டுகளாக என் மீது நீங்கள் காட்டிய மரியாதைத் தொல்லைக்கு நன்றி. இப்படி என்னென்ன அர்த்தமெல்லாமோ தென்படுகிற மாதிரி ஒரு பார்வை. ஒரு சிரிப்பு.
“சார்...” என்று மறுபடியும் சொன்னான் சிதம்பரம் குரல் கம்மியிருந்தது. தலை கவிழ்ந்தான். நிமிரும்போது கண்கள் கலங்கியிருந்தன.
“சரி... கிளாஸுக்குப் போ! எனக்கு ரிலீவிங் ஆர்டர் ரெடியாயிட்டிருக்கு. நான் ஆபீஸ் ரூம் போறேன்!”
“இன்னிக்குப் பௌர்ணமி சார்!”
“ஹைக்கிங் தானே? உண்டு. அஞ்சரை மணிக்குப் பசங்களை ரெடி பண்ணி ரூமுக்குக் கூட்டிட்டு வந்துடு. அஞ்சே முக்காலுக்கு மலை அடிவாரம். கடைசி ஹைக்கிங். விட்டுடக் கூடாது.”
விட்டால் சிதம்பரம் அங்கேயே அழுது விடுவான் போலிருந்தது. முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டினார்.
“இதுதான் கோழைத்தனம்!”
“சார்...” என்று தடுமாறினான் சிதம்பரம்.
“கிளாஸுக்குப் போ.”
அதற்கு மேல் நாராயணன் மாஸ்டர் அங்கே நிற்கவில்லை. அலுவலக அறை நோக்கி விறுவிறு வென்று நடந்தார்.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் பக்கத்திலிருந்த மலைக்குப் பையன்களோடு ஹைகிங் போகிற மாதிரி அன்றும் அவர் காத்திருந்தார். முதலில் வருகிற சிதம்பரம் வரவில்லை.
ரகுபதிதான் வந்தான்.
பர்ஸைத் திறந்த ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். பேசவில்லை.
பொரிகடலை, மிக்சர், பக்கோடா எல்லாம் வாங்கி வர வழக்கம் போல் என்ற அதற்குப் பொருள்... ரகுபதிக்குப்புரிந்தது.
ஆனால் அவன் நோட்டை வாங்கவில்லை.
“இல்லே சார்... இன்னிக்கு நாங்கதான் வாங்கப் போறோம்.”
நோட்டை வைத்துக் கொண்டே ஒரு கணம் யோசித்தார்.
“ஓ.கே! இதுக்கு வாழைப் பழம் வாங்கி வா.”
மீண்டும் அவன் தயங்கினான்.
“சொல்றேன் இல்லே” என்று அவர் புருவத்தை நெறித்தார். அவன் மறு பேச்சின்றி நோட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினான்.
ஐந்தரை வரை சிதம்பரம் வரவில்லை. வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நாராயணன் மாஸ்டர் புறப்பட்டார். பையன்கள் பின் தொடர்ந்தனர்.
வழக்கமாக வழியெல்லாம் பாட்டும் பேச்சும் சிரிப்புமாக ஒரே கலகலப்பாக இருக்கும். இன்று நிசப்தம், மௌன ஊர்வலம் போல.
“கோபி, ஒரு பாட்டு பாடேண்டா!”
“மூடில்லே சார்.”
“ஜெகன், என்னடா பேஸ்த் அடிச்ச மாதிரி வர்றான்?”
“சார் நாங்க எல்லாம்நொந்து போயிருக்கோம்!”
“நம்பாட்டா விட்டுருங்க!”
நாராயணன் மாஸ்டருக்கு நெஞ்சு விம்மியது. ஒரு கணம்தான். அவரும் சாதாரண மனிதன்தான் என்று நினைவூட்டுவது போல். அவர் சமாளித்துக் கொண்டார்.
அன்பு ஓர் உரம்தான். பலவீனப்படுத்தும் சக்தி அல்ல. புரிந்து கொண்டிருந்த அவருக்கே இது சிரமமாக இருந்தது.
மலையடிவாரத்தில், மொட்டைப் பாறை மீது எதிரில் ஒரு குட்டையில் கல்லெறிந்து கொண்டிருந்த சிதம்பரம் தென்பட்டான்.
“சிதம்பரத்துக்கு ரூமுக்கு வரப் பிடிக்கலேடா கோபி!” என்று கிண்டல் செய்தார் மாஸ்டர்.
அவன் எழுந்து கொண்டான்.
தன் குரல் தனியாக ஒற்றை ஒதுக்கத்தில் விலகி நிற்பதை 
உணர்ந்தவாறு மலையேறிக் கொண்டே நாராயணன் மாஸ்டர் பேசிக் கொண்டு போனார்.
“சிதம்பரம் இன்னிக்கு என்ன சொன்னான் தெரியுமா? நான் மகாத்மா காந்தி மாதிரி பேசிப் பேசியே ஒங்களையெல்லாம் கோழையாக்கிட்டேனாம்!”
யாரும் பதில் தரவில்லை.
“அவன் சொன்ன உதாரணம் தப்பு! காந்திஜி பேசி யாரும் கோழை ஆகலை.”
“சார்...” என்று இடைமறித்து என்னவோ சொல்லப் போனான் சிதம்பரம்.
“இரு நான் முடிச்சுடறேன்! எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்திருக்கு. நான் அரசு ஊழியன். கிளம்புன்னா கிளம்பியாகணும். இவன் ஸ்ட்ரைக் பண்றேன்றான். அதுக்கெல்லாம் மசிந்து என் ட்ரான்ஸ்ஃபர் உத்தரவு ரத்து ஆயிடாது. என்ன சாதிக்கப் போறீங்கன்னு கேட்டதுக்கு இந்த பதில் சொல்றான்...”
மலைப்பாதை நெட்டுக் குத்தாக வளர்ந்து கொண்டு போயிற்று. அரை மணி நடந்தால் ஒரு மைதானத்தில் மேடை போட்ட மாதிரி ஒரு பாறை அடுக்கு வரும். நிலா வெளிச்சம். நல்ல காற்று. மூலிகை மணம் கமழும் காற்று, அங்கேதான் போய்க் கொண்டிருந்தார்கள்.
“ஜெகனுக்கும் சிதம்பரத்துக்குத் தாண்டா ஒங்கள் எல்லோரையும் விட என் மேலே அதிக கோபம் இருக்கும்.”
ஏன் எதற்கு என்று யாரும் கேட்கவில்லை.
“டென்த்லே அவங்க பெஞ்சை ஒடச்சுக்கிட்டு இருந்தப்போ நான்தான் கையைக் கட்டிக்கிட்டு அவங்களை வேடிக்கை பார்த்தேன்!”
பிறகு அவர்கள் எதிரிலேயே ஓர் ஆசாரியைக் கூப்பிட்டு ரிப்பேர் செய்வித்து, அந்தக் கூலியைத் தன் கையிலிருந்து கொடுத்ததை அவர் சொல்லவில்லை.
“ஐ திங்க்... அவங்களுக்கு எது எது மேலயோ ஆத்திரம்! அதையெல்லாம் தீர்த்துக்கணும்னா, இந்த நாராயணன் மாஸ்டர் வேற பேசிப் பேசி அறுக்கறார்னு ஒரு பொறுமல்... இல்லே ஜெகன்?”
ஜெகன் முகம் உர்ரென்றிருந்தது. திரும்பிப் பார்க்காமலேயே அவருக்கு அது அப்படித்தான் இருக்கும் என்று தெரியும்.
“சார்... நீங்க எது வேணும்னாலும் பேசுங்க!”
எல்லோரும் சூம்பிப் போயிருந்தனர், இன்று ஹைக்கிங் இருந்திருக்க வேண்டாம் என்று நினைப்பது போல. ஆனால் நாராயணன் மாஸ்டருக்கு அது அவசியப்பட்டது. இவர்கள் தன்னைப் பிரிவது போல தான் இவர்களைப் பிரிவதும் வருத்தமான விஷயம்.
அந்த வருத்தம் கொண்டாடிக் கொள்கிற கண்ணீர்க் காட்சியாக இருப்பதில் அவருக்குச் சம்மதமில்லை. அது ஒரு மகிழ்ச்சியின் முத்திரையோடு முடிவுற வேண்டும். அதற்கும் மேல்... அதற்கும் மேல்...
அதைப் பாறை அடுக்கின் மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு கட்டியவராக அவர் நடந்தார்.
“ரகுபதிக்கு அவங்க பெற்றோர் அவன் டாக்டரோ இன்ஜினீயரோ ஆயுடணும்னு கொடயறதிலே ஆத்திரம். லோகுவுக்கு அவன் இஷ்டப்படி சினிமா வீடியோ பார்க்கவிட மாட்டேங்கறாங்கன்னு ஆத்திரம். கணபதிக்கு அவன் ரசிகர் மன்றத்திலே தலையிடக் கூடாதுன்னு தடுக்கறாங்களேன்னு ஆத்திரம். பொதுவா எல்லாருக்கும் படிங்கடா படிங்கடான்னு எப்பப் பார்த்தாலும் எல்லாரும் கழுத்தை அறுக்கிறாங்களேன்னு பெரிய ஆத்திரம். இல்லையா?”
எல்லோரும் மௌனமாக நடந்தனர். லோகு மட்டும் தாள முடியாமல் பேசினான்.
“இப்பிடிப் பேசிட்டே இருந்துட்டு நீங்க எங்களையெல்லாம் விட்டுட்டு நாளைக்குக் கௌம்பிடுவீங்க.”
“நானாவா போறேன்?”
பாதை ஒரு பாம்பு வளைசல் வளைந்தது.
“நீங்களா அனுப்புறீங்க?”
“நாங்க எங்க எதிர்ப்பைக் காட்டறோம் சார். எங்களை விடுங்க.”
“காட்டினா அதுக்கு என்ன அர்த்தம் வரும் தெரியுமா?”
“நீங்க எதிர்க்கச் சொன்னீங்கன்னு யாராவது சொல்வாங்க.”
“அதுதான் ஈஸியாச் சொல்லிடலாமே! அதுக்கு மேல ஒண்ணு இருக்கே அதை யாராவது யோசிங்க.
“இப்பவே வேணாம். மேடைப் பாறையிலே சொன்னாப் போதும். அட என்னாங்கடா... என்னமோ மௌன ஊர்வலம் வந்துகிட்டிருக்கீங்க... ஜெகன் நீ பாடப் போறதில்லே... இல்லே?”
ஜெகன், சார் என்று மாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது என்று புரிந்து கொண்டு நெளிந்தா
“சரி போங்கடா... நானே பாடறேன்” என்று சற்றும் தயங்காமல் நாராயணன் மாஸ்டர் பாடத் தொடங்கினார். பாரதி பாட்டு.
“காலமாம் வனத்தில் அண்டக் கோல மாமரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவி வரும் வண்டு...”
கணீரென்ற குரல். மலை ஏற்றத்தையோ மூச்சிரைப்பையோ காட்டாத குரல். ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா’வையும், ‘கேன்யூ கெட் மீ எ லாஃபிங் லீடை’யும் பாடுகிற அதே ஈடுபாடு தோய்வு.
கொஞ்ச தூரம் போனதும் பையன்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஒருவர் மாற்றி ஒருவர் என்று சினிமாப் பாட்டுகளைப் பாட ஆரம்பித்து விட்டார்கள். சிதம்பரம் தவிர.
மேடைப் பாறை வரும்போது நிலா உதித்து விட்டது. வெளிச்சம் பாறையைக் கழுவி மெழுகிக் கொண்டிருந்தது.
நாராயணன் மாஸ்டரைச்சுற்றிப் பையன்கள் உட்கார்ந்தனர். ரகுபதி பொட்டலங்களைப் பிரித்து ஆளுக்குக் கொஞ்சம் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வந்தான். அதற்கு அடுத்து ஜெகன் வாழைப் பழத்தை ஒவ்வொன்றாகக் கொடுத்தான்.
அது முடிந்ததும் வாட்டர் பாட்டில் தண்ணீர் எல்லாருக்கும் ஒரு வலம் வந்தது.
எல்லாம் முடிந்து காற்று மெல்ல வீசத் தொடங்கிய போது நாராயணன் மாஸ்டர் பேச ஆரம்பித்தார்.
“சிதம்பரத்துக்கு இப்ப எது மேலடா ரொம்ப ஆத்திரம்... சொல்லு?”
“எது மேலேயும் இல்லே சார்!” என்று சிதம்பரம் சொன்னான்.
“நிஜம்மா?”
“நிஜமா சார்.”
“ஸ்ட்ரைக் பண்றேன்னியே.”
“இப்ப இல்லே சார்.”
“ஏன்?”
“தப்புன்னு தோணிப் போச்சு.”
“எப்படி?”
மேடைப் பாறை வரையில் ஒத்திப் போட்டிருந்த செய்திக்காக அவர் தூண்டில் போட்டார்.
சிதம்பரம் பதிலளிக்கவில்லை.
“வேற யாராவது?”
கூட்டத்தில் ஒரு யோசனை மேகம் கவிந்தது.
“நீங்க என்னவெல்லாம் சொல்லிட்டு இருந்தீங்களோ அதுக்கு மரியாதை இல்லாம போயிடும் சார்!” ஜெகன் சொன்னான்.
“கிட்டத்தட்ட சரி! தெளிவா யாராவது சொன்னா நல்லா இருக்கும்.”
மீண்டும் யோசித்தார்கள்.
அவர்களுக்கு வாய்ப்பளிக்கிற மாதிரி இரண்டு நிமிடம் விட்டுப் பின்னர் நாராயணன் மாஸ்டர் சொன்னார்.
“உங்களை எல்லாம் நான் ஏன் நேசிச்சேன், நேசிக்கறேன்னு ஒங்க எல்லாருக்கும் தெரியுமா?”
“சொல்லுங்க சார்!”
“ஜஸ்ட் உங்களுக்காகத்தான். வேற பிரதிபலன் எதிர்பார்த்து இல்லே.”
“...”
“வழியிலே வர்றப்ப சொன்னேனே... நீங்க எல்லாம் எது எதுமேலயோ ஆத்திரமாயிருக்கீங்க... ஒங்களை எல்லாரும் புடிச்சு ஜெயில்லே தள்ளிட்டாப்பிலே சங்கிலியிலே மாட்டிட்டாப்பிலே ஒரு கோபம் இருக்கு இல்லே.”
“ஆமாம் சார்!” ஒரு கோரஸ் வந்தது.
“இதுக்கெல்லாம் பேஸிக்கா இருக்கிறது ஒங்க மேல உண்மையான அன்பு யாருக்கும் இல்லேன்ற ஏக்கம் தான். அதான் என்னை அட்ராக்ட் பண்ணியது! ஆனா உண்மை என்ன தெரியுமா?”
“...”
“உங்களை நீங்களே போதுமான அளவு நேசிக்கலே.”
“புரியலே சார்...”
“இப்ப புரியாட்டி பரவால்லே. நிதானமா யோசிச்சா... நாள் கணக்கிலே மாசக் கணக்கிலே நெனச்சுக்கிட்டே இருந்தா புரிஞ்சுடும். எங்கிட்ட நீங்க பிரியமா இருக்கீங்களே... இதுதான் நீங்க ஒங்களோடயே நேசமா இருக்கறதுக்கு சாம்பிள். இதை நான் பயன்படுத்திட்டா ரொம்ப ரொம்ப சீப் ஆயிடுவேன்.”
அவர்களுக்கு மூடுபனியின் ஊடே ஓர் உருவம் புலப்படுவது போல் என்னமோ புரிந்தது.
“எனக்கு என்னமோ இந்த ட்ரான்ஸ்பர்லே எந்த வருத்தமும் இல்லாத மாதிரியும், ஒங்களை எல்லாம் விட்டுட்டுப் போறதிலே கவலையே இல்லாத மாதிரியும் தோணலாம். எனக்கும் வருத்தமா இருக்கு. வெறுப்பாக் கோவமாகக் கூட இருக்கு...”
கூட்டம் அவரையே வெறித்துப் பார்த்தது.
“எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம்னா ஒரு முடிவு உண்டு. 
இங்கே வந்தேன். ஒங்களையெல்லாம் பார்த்தேன். பழகினேன். இப்போ ஒரு முடிவு வந்திருக்கு. “இதை ஏன் எதிர்க்கணும்... நானோ எனக்காக நீங்களோ தாறுமாறா ஏதாவது செஞ்சா என்ன பலன்?”
அவர் தோள்களை உலுக்கிக் கொண்டார். ஒரு பெருமூச்சு விட்டார். கைகளை விரித்தார்.
“ஒரு பலனும் வராது. எனக்குக் கெட்ட பேர் வர்றதை விட எதையோ என்னத்துக்காகவோ இழந்துட்ட வருத்தம்தான் எனக்கு மிஞ்சும்.” நாராயணன் மாஸ்டர் அந்த ‘எனக்கு’ வை அழுத்திச் சொன்னார்.
சிதம்பரம் குறுக்கிட்டான்.
“நீங்க ரொம்ப அடக்கி வாசிக்கறீங்க சார்.”
“என்ன தப்பு? பெருக்கி வாசிக்கறதை விட அடக்கி வாசிக்கிறது மேல் இல்லே.”
எல்லோரும் சிரித்தனர்.
“இன்னும் கூட ஒங்களுக்கு நான் சரியா எக்ஸ்ப்ளெய்ன் பண்ணேனான்னு தெரியலே” என்று தயங்கினார்.
“சார்... சார்... க்ளாஸ் எடுக்கறீங்க சார்!” என்று ஜெகன் குறுக்கே கத்தினான்.
“ஆமாம்... லெட் இட் பீ... கடைசி கிளாஸ்...”
மௌனம் நிலவிற்று.
“நீங்க டாக்டர் ஆகிறதோ இஞ்சினீயர் ஆகறதோ அமைச்சர் ஆகறதோ கலெக்டர் ஆகறதோ எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்துவிடாது. நீங்க அதெல்லாம் ஆகணும்னு நான் எதிர்பார்க்கலே. ஆய்ட்டீங்கன்னா அதனாலே வருத்தப்பட்டுற மாட்டேன். நீங்க அதுக்கும் மேலே மேன்மையான மனுஷங்களானீங்க; அதுக்கு எங்கியோ நான் ஒரு சின்னத் தூண்டுதலா இருந்திருக்கேன்னா அப்ப தான் என் சந்தோஷம் உண்மையா இருக்கும்.”
கூட்டத்தில் உணர்ச்சிகளை மீறி எதுவோ ஒரு கனம் வந்து அழுத்திற்று.
மறுநாள் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நாராயணன் மாஸ்டரை வழியனுப்ப சிறு கூட்டம் நின்றிருந்தது. எல்லாரும் பையன்கள். சிதம்பரம் நடுவில் நின்றிருந்தான்.
ரயில் வந்தது. சாமான்களை ஏற்றி அவர் ஸீட் பிடித்து உட்கார்ந்தார். வெளியே பல கரங்கள் ஆடின. இரண்டு கைகள் மட்டும் கூப்பியிருந்தன. அது சிதம்பரம். ரயில் புறப்படுகிற வரை கூட கும்பிட்ட கை கும்பிட்ட மாதிரியே நின்றான்.
நாராயணன் மாஸ்டரும் கும்பிட்டார். 
மானுடம் உருவாகும் போது அதை வணங்கித்தானே ஆக வேண்டும்?

கடலும் கிழவனும்

  கடலும் கிழவனும்
                   

                                                             

எர்னெஸ்ட் ஹெமிங்வே

எர்னெஸ்ட் ஹெமிங்வேவுக்கு, நோபல் பரிசையும், புலிட்ஸர் பரிசையும் வாங்கித் தந்த இந்தச் சிறிய நாவலில் கதை அம்சம் குறைவு. எழுபது வயதுச் செம்படவன் சாந்தியாகோ, 84 தினங்கள் மீன்கள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசமும் மதிப்பும் உடைய சிறுவன் ஒருவனால் பராமரிக்கப்படுகிறான். எண்பத்தைந்தாம் நாள், தன் சிறிய படகில் தனியாக மீன் பிடிக்கச் சென்று, 18 அடி நீளமும் 1500 பவுண்ட் எடையுமுள்ள மீனைப் பிடிக்கிறான். அது லேசில் அவன் வசப்படுவதில்லை. மூன்று தினங்கள் அன்ன ஆகாரமின்றி நடுக்கடலில் கிழவனுடன் மல்லுக்கு நின்றுதான் அது தோற்கிறது. கடலில் அலைகின்ற, பசித்த சுறாக்கள் அதைக் கவ்வித் தின்கின்றன. தனது லட்சிய சித்தியைப் பறிகொடாவண்ணம், அக்கிழவன் வீராவேசத்துடன் போராடுகிறான். ஆனாலும், வென்றவனுக்கு ஒன்றும் மிஞ்சவில்லை. மீனின் எலும்புக் கூடும் படகுமாய்க் கரை சேருகிறான்.
இவ்வளவு தான் கதை.
கலைக்கு ஒரு நோக்கம் உண்டு மனிதனின் அறிவையும் இதயத்தையும் உயர்த்துவதில், கிணற்றின் அடியில் சுரக்கும் ரகசியமான ஊற்றைப் போல்தான் அதன் பங்கு. ஒவ்வொரு உணர்ச்சி அல்லது கொள்கையின் பிரசாரம்தான். அந்தப் பிரசாரம் பளிச்சென்று தெரியாத வரையில் தான் அதன் வெற்றி. இது ஒரு மனிதனைப் பற்றிய பிரசாரம். குறைந்த பாத்திரங்கள், குறைந்த கதை, குறைவான பக்கங்கள். இவற்றில் ஒரு லட்சிய மனிதனையே சித்தரிக்கும் கஷ்டத்தைக் கலையழகுடன் அபாரமாகச் சாதித்திருக்கிறார் ஹெமிங்வே.
                                                             

                                                                 
கதை நெடுக மனத்தில் பிரமிக்கத் தக்க நம்பிக்கை ஒளியும், தோல்வியை இறுதி வரை ஒப்புக் கொள்ளாத வீர உணர்ச்சியும், சகல ஜீவராசிகள் மீதும் எல்லையில்லா அன்பும் கொண்ட ஒரு மனிதனின் சித்திரத்தைக் கவனமாக அநாயாசமான மேதையோடு தீட்டியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக சாதனை, லட்சிய சித்தி இவற்றை எய்துவதில் இறுதிக் கோடு வரை நிமிர்ந்தே நிற்கும் மனிதனின் ஆத்ம காம்பீர்யம்தான் இந்தக் கதையின் சங்கதி (Message).
மீனுடன் அக்கிழவன் நடுக்கடலில் மாட்டிக் கொள்கிறான். படகு மீனை இழுக்கிறதா, மீன்தான் படகை இழுக்கிறதா என்ற சந்தேகமான நிலை. மூன்று தினங்கள் சரியான உறக்கமில்லை, உண்ண உணவுமில்லை. பச்சை மீன்களைப் பிடித்துக் கூறு போட்டுத் தின்கிறான். வலது கையில் மீன் துள்ளும்போது பலத்த காயம் ஏற்படுகிறது. அந்த மீன், அவனை விட, அவன் படகை விடப் பெரியது. அபாயகரமான எதிரி. அவன் அஞ்சவில்லை, ஒருமுறை கூட அவன் நடுங்கவில்லை.
எஃகு போன்ற உள்ளம் அவனுடையது. இருந்தாலும் கடலில் வழியறியாது சுற்றிப் பாய்மரத்தில் தங்கும் சிறிய கரிக்குருவியின் மீதும் அவன் அன்பு தாவுகிறது.
“சின்னஞ் சிறிய பறவைச் சிறுமியே, இளைப்பாறு! பிறகு வாழ்க்கை உனக்குத் தரும் சந்தர்ப்பத்தை, மனிதனைப் போலும், பறவையைப் போலும், மீன்களைப் போலும் தைரியமாய் ஏற்றுக் கொள்.”
மீன்கள், பருந்துகள், ஆமைகள், மனிதர்கள், பறவைகள், அவன் இதயம் எல்லாவற்றையும் அள்ளித் தழுவுகிறது. அவன் ஒரு கவிஞனைப் போல், காதலனைப் போல் வாழ்க்கையை நேசிக்கிறான்.
கிழவனுக்குக் கர்வம் இல்லை; தலைக்குனிவும் இல்லை. நடுக்கடலில், தன்னந் தனியாக அவனை விடப் பத்து மடங்கு பெரிய மீனுடன், அவன் போரில் ஈடுபட்டிருக்கும் போது அவன் உள்ளம் ‘பேஸ் பால்’ சாம்பியன் டிமேக்கியோ தன் காலில் குதிமுள் தரித்து ஆடும் ஆட்டத்திற்குச் சமானம் ஆகாது இது என்று கருதுகிறான்.
மீனும் பெரியது; அவனும் பெரியவன். இருவரும் கனவான்கள்தாம். இவர்களிடையில் ஓடும் உறவு அல்லது பகையின் நிகாச்சிகள் இரண்டு ‘கேரக்டர்’களின் மோதல்தான்.
“மீனே! உன் மேல் எனக்குப் பிரியமே; உன்னை நான் கௌரவிக்கிறேன். ஆனால், அஸ்தமனத்திற்குள் உன்னைக் கொன்றே தீருவேன்” என்கிறான் கிழவன். இதன் பெருந்தன்மையையும் கம்பீரத்தையும் பார்க்கும்போது, இதைத் தின்ப போகிறவர்களுக்கு தின்னும் தகுதி இல்லை என்று உருகுகிறான்.
மூன்று நாள் தன்னோடு அந்த மீனும் பட்டினி கிடப்பதற்காக அவன் வேதனையே படுகிறான். மீன் போராடத் தொடங்குகிறது.
“உன்னைவிடப் பெரிய, அழகிய, அற்புதமான, சாந்தமான, உயர்வான, பெருந்தன்மை மிகுந்த மீனை நான் கண்டதேயில்லை. வா, என்னைக் கொல், நமக்குள் யார் யாரைக் கொன்றாலும் எனக்கு அக்கறையில்லை” என்று அழைக்கிறான். போர் முடிகிறது. இறுதிவரை வீரனாகவே, அதைவிடப் பெரிய வீரன் கையில் அடிபட்டு அந்த மீன் மாள்கிறது.
கடலில் கொஞ்ச நேரம் பொழுது செல்கிறது. எறிந்த தூண்டிலையும் எடுக்காமல், படகைவிடப் பெரிய மீனை அப்படியே கடலில் இழுத்துச் செல்கிறான் சாந்தயகோ, பசித்த சுறாக்கள் மாண்ட மீனைக் கவ்வித் தின்கின்றன. அடக்க முடியாத வெறியுடன், வேதனை ததும்ப சுறாக்களை அவன் தன்னால் முடிந்த அளவு கொல்கிறான். அந்தச் சுறாக்களின் மீதும் அவனுடைய அன்பு தாவுகிறது.
“சுறாவைக் கொல்வதில் உனக்கென்ன ஆனந்தம்? அதுவும் மற்ற மீன்களைச் சாப்பிடுகிறது. அது பயமற்றது. அழகானது” என்ற கருதுகிறான்.
ஒன்று ஒன்றுக்கு மேல் ஒன்று; எத்தனையோ சுறாக்கள், அவனது வெற்றியை, நடுக்கடலில் சூறையாடுகின்றன.
“சாகும் வரை சண்டையிடத் தயார்” என்கிறான். கடைசியில் அவனுக்குச் சொல்ல முடியாத வருத்தம் உண்டாகிறது.
கடற்கரையில் அந்த மாபெரும் மீனின் எலும்புக் கூடு அவனது வெற்றியாய், அல்லது வெற்றியின் தோல்வியாய், நிற்கிறது. கிழவனுக்கு அதைக் கண்டும் நம்பிக்கை பிறக்கிறது. புதிய பெரிய மீன்களுக்காக, அவன் மீண்டும் செல்லத் தயார்! எந்தத் தோல்வியும், எவனை வீழ்ச்சியடையச் செய்யவில்லையோ, அவனே மனிதன். வென்றவனுக்கு ஒன்றுமில்லாமல் போகலாம். ஆனால் அவன் பெறும் வெற்றி இருக்கிறதே, அதுதான் வாழ்க்கை. கதை முடியும்போது, குருக்ஷேத்திரமும் கீதையும் ஞாபகம் வருகிறது. ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’

                                                              வையவன் கட்டுரை 
மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். இதுவெறும் கதையல்ல. தலைவணங்காத, அன்புமிக்க, லட்சிய வீறுள்ள ஒரு மனிதனின் சித்திரம். எர்னெஸ்ட் மில்லர் ஹெமிங்வேயின் ஜல்லிக் கட்டுக் காளை போன்ற கருத்தும் வாக்கும் திமிறியடித்து ஓடும் நடையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கிழவன் சாகலாம், மீன்கள் சாகலாம். மனிதனும் பிரபஞ்சமும், மனிதனும் இயற்கையும், மனிதனும் சமூகமும் - இந்த ஓயாத போராட்டம் என்றைக்கும் இருக்கும். இந்த யுத்தத்தில் பங்கேற்க விரும்புவோர் எல்லாம், சாந்தியாகோவின் இதயத் துடிப்பை, அதன் அடிநாதத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Monday 14 March 2016

மிருகாபிமானிகளும் மனிதாபிமானிகளும்

டித்துக் கொல்வதற்கு முன்பு அந்த நாகப் பாம்பை நான் பார்த்ததில்லை.
என் மனைவி, மாமனார், மாமியார், இரு மைத்துனர்கள், மூன்று மைத்துனிகள்... இவர்கள் தவிர, வயல் வரப்பின் மேல் நடந்து, அந்தக் கொல்லையைக் கடந்து செல்லும் அனேகர் பார்த்திருக்கிறார்கள். அடிக்கடி இங்கே கூட உலவுமாம். நான் பார்வையைச் சுழற்றினேன்.
ஒரு புறம் ஓடுகளும் எதிரில் மஞ்சள் புல்லும் வேய்ந்த எதிரெதிர் வீடுகளுக்கு இடைப்பட்ட முற்றத்து வாசலில் நிலா ஒளி பொழிந்து கொண்டிருந்தது.
சுற்றிலும் எல்லாரும் ஒரு வட்டம் அமைத்தது போல் சூழ்ந்திருக்க, நடுவில், வாலின் மையத்தில் அடிபட்டு மாண்டிருந்தது பாம்பு.
உயிரின் இறுதிச் சலனமாக பாம்பின் வால் நுனி ஏதோ ஒரு முடிச்சைப் போட்டு அவிழ்ப்பது போல் சுருண்டு நெளிந்து, மீண்டும் நிமிர்ந்து முறுக்கியது.
“அடடே... இது நம்ம ராஜய்யா இல்லே?”
கூட்டத்தின் சுவாரஸ்யம் கட்டிக் காத்த மௌனத்தை முதலில் கலைத்தவர் என் மாமியார்.
என் மாமனார் வலது கையை மூன்று விரல்களும் நீட்டி, தரையில் பதிய இடக் காலை முழந்தாளிட்டு மடக்கி, சற்று நெருங்கி வந்தார்.
அவர் பார்வை பாம்பின் மீது சிறிது நேரம் தங்கியது.
“ஆமா... ராஜய்யன் தான்!”
அவர் ஆமோதித்தார்.
“ஐயையோ...”
எனது முதல் மைத்துனி.
தொடர்ந்து, கூடியிருந்தவர் மத்தியில் ஒரு சலனம். அனுதாப அலை.
“ஏழெட்டு வருஷமா நம்ப புங்க மரத்தடியிலேதான் இருக்கு. யாருக்கும் எந்தக் கெடுதலும் இதுவரைக்கும் செஞ்சதில்லே.” என் மனைவி.
“வீட்டைச் சுத்தி வரும். போவும். நான் எத்தனையோ நாள் பார்த்திருக்கேன்.” இரண்டாம் மைத்துனி.
அடுத்து மாமனார் என்ன சொல்லப் போகிறாரோ என்று கிட்டத்தட்ட ஒரு கொலையாளியின் குற்ற உணர்வோடு என் செவிகள் குறுகுறுத்தன.
அவர் என்னை ஒரு தரம் பார்த்துவிட்டு பாம்புக்கு மாறினார்.
“நீ ஏண்டா இந்தப் பக்கம் வந்தே?” முதலில் தூக்கி வாரிப் போட்டது. இல்லை... என்னையல்ல...
இறுகி உயிர் மூச்சை விட்டு நிர்ச்சலனமாகி விட்ட நாகப்பாம்பைப் பார்த்து செய்யத் தகாத ஒரு செய்கையால் உயிரிழந்து விட்ட நெருக்கமான சினேகிதன் ஒருவரைக் கேட்பது போல் கேட்டார்.
எனக்குள் நச்சென்று பிடரியில் ஓர் அடி.
ஆக இது கொலைக் குற்றம்தான்.
“நாகப் பாம்பை அடிக்கக் கூடாதே!” அடுத்து மாமியார்.
“ஆமாம்... தெய்வக் குத்தமாச்சே.” மைத்துனி எண் மூன்று.
என் மனம் நடந்ததை மறுபரிசீலனை செய்தது.
சற்று நேரத்திற்கு முன் நெல் உலர்த்தும் களத்திலிருந்து சிறு சிமெண்டுப்படி ஏறி பழங்கலம் வைத்திருக்கும் பண்டபாத்திர அறைக்குள் நுழைவதை ஒரே லட்சிய நோக்காக வைத்துக் கொண்டிருப்பது போல் அது சரசரவென்று ஊர்ந்து வந்தது.
உடனே கவனித்தது நான். அடுத்து என் இளைய மைத்துனன்.
நிலா வெளிச்சத்தில் நான் கரும்புத் துண்டு ஒன்றைக் கடித்துக் கொண்டிருந்தேன்.
பக்கத்தில் என் சுவாரஸ்யம் நீடித்தால் வெட்டுப்படத் தயாராய் ஒரு நீண்ட கரும்புக் கிடை.
வாசல் ஒட்டி, அரையடி உயரத்தில் சிமெண்ட் நடையில் ஓட்டு வீட்டின் சார்ப்பாய் இறங்கிய ஓலைப் பந்தலின் மைய மரக் கழியில் சாய்ந்து கொண்டு என் இளைய மைத்துனன்.
அவரருகில் ஒன்றரையங்குல விட்டத்தில் புளியம் பழத்தின் மேலோடு நொறுக்கப் பயன்படும் மூங்கில் கழி. மூன்றடி நீளம்.
ராஜய்யா (என்ன பெயர் அது? ராஜநாகம் என்பதற்கான அடையாளக் குறியீடா... அல்லது எந்த ராஜய்யாவோ அந்தப் பாம்பு மாதிரி இருந்த ஞாபகார்த்தமா?) இந்த இரு ஆயுதச் சூழலின் இடையேதான் தன் இறுதி யாத்திரை மும்முரத்தில் வந்தது.
பாம்புகளுக்கு நான் பயன்படுவதில்லை. ஏனென்று தெரியாது. சுபாவம். மற்றபடி வீரதீரம் ஒன்றுமில்லை.
“மாமா... பாம்பு...” என்று இளைய மைத்துனன் கத்தினான்.
அவனும் பயந்து கத்தவில்லை. ஒரு வியப்பில்தான் கத்தினான். பார்த்தால் இரண்டு கைவீசிப் போடும் நீளத்தில் நிலாவொளியின் மினுமினுப்பில் ஒரு பாம்பு.
குரலோசைகளுக்கு தனி சக்திகள் உண்டு. டெஸிபல் மிகுந்தாலோ வேறு அதிர்வு மாற்றம் இருந்தாலோ நாம் துணுக்குறுகிறோம். நம்மை அவை ஸ்விட்ச் போட்டு இயக்கி விடுகின்றன.
தன்னிலை மீளுவதற்குள் அனிச்சையாகச் செயல்பட்டு விடுகிறோம்.
நான் இப்படிப்பட்ட பலவீனங்களுக்கு இரையாகிறவன்.
பக்கத்திலிருந்து கரும்புக் கிடையை எடுத்து ஊர்ந்து வந்த பாம்பின் நடு உடலின் மீது ஓங்கி அடித்தேன்.
குரலோசைகள் போன்றே செயல்பாடுகளுக்கும் ஒரு சக்தி உண்டு. ஒருவன் அடிக்கும் தீவிரம் பார்த்து மற்றவனுக்கு அதே வேலையைச் செய்ய ஓர் அனிச்சை உத்தரவு தோன்றிவிடும்.
அப்படித்தான் என் இளைய மைத்துனனின் அருகிலிருந்து மூங்கில் கம்பு இயங்கி இருக்க வேண்டும்.

                                                         
                                                              வையவன் சிறுகதை 
இரண்டில் எது தாக்கமான அடி என்பதை இப்போது என்னால் சொல்ல முடியவில்லை.
ஆனால் இளைய மைத்துனனின் அடி பாம்பின் தலை மீது விழுந்தது. அறிவு பூர்வமாக அதுதான் சரியான இலக்கு.
பாம்புகளை உடம்பில் அடித்தால் அது சீறித் திரும்பும் வாய்ப்பு உண்டு. அது அப்படித் திரும்பி இருந்தால் மீண்டும் நான் அறிவு பூர்வமாக இயங்கியிருக்கக் கூடும். முதல் வாய்ப்பைத் தவற விட்டபின் சொல்லும் சமாதானம்!
வாசலில் நிலா வெளிச்சத்தில் நான் உட்கார்ந்திருந்ததால் இரண்டு தாக்குதல்களில் என்னுடையது தான் எல்லார் கவனத்தையும் ஈர்த்திருக்கும். ஈர்த்தது.
அதனால்தான் குற்றத்தின் முழுப்பளுவும் என் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
ராஜய்யா எவ்வளவு சாது. எத்தனை ஆண்டுகளாக என் மாமனார் குடும்பத்தோடு அதற்குப் பரிச்சயம் என்ற விவரங்கள் நகரத்திலிருந்து சிறு இளைப்பாறுதல்களுக்காக கிராமத்து மாமனார் வீட்டிற்கு வரும் எனக்குத் தெரிய நியாயமில்லை.
அதையும் அவர்கள் அறிவார்கள்.
வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு நச்சுப் பாம்பைக் கொன்றதற்கு உரிய பாராட்டுதலுக்குப் பதில், ஒரு குடும்ப சாபத்திற்கு வழிவகுத்து விட்ட கொடூரச் செயலுக்கு நான் பொறுப்பான குற்றப் பத்திரிகை எல்லார் முகத்திலும் தென்பட்டது.
“நான்... எனக்கு ஒண்ணுமே தெரியாது. பாம்பு, பெண்டு பிள்ளைங்க இருக்கற வீட்டிலே நுழைஞ்சுடப் போவுதுண்ணு அடிச்சுட்டேன்...”
என்னை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றேன். நான் எதிர்பார்த்த தேற்றுதலோ... “அதுக்கென்ன செய்யலாம். அந்தப் பாம்பின் விதி’ என்ற சமாதானத்தையோ காணோம்.
எல்லோரும் மௌனம் காத்தனர்.
குறைந்தபட்சம் என் மனைவி? ஆபத்சகாயியான என் முதல் மைத்துனர்? ம்ஹூம். எவரும் அசைந்து கொடுக்கவில்லை.
அவளைப் பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்து என்னை ஒருமுறை
முறைத்தாள் என் மனைவி.
எனக்கு ஏனோ எர்னெஸ்ட் ஹெமிங்வே ஞாபகம் வந்தது. ‘டெத் இன் த ஆஃப்டர் நூனி’ல் மிருகங்கள் படும் வேதனைகளைப் பிரமாதப்படுத்துகிறவார்கள், மிருகாபிமானிகள். அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது!’ கிட்டத்தட்ட இப்படி ஏதோ சொன்ன ஞாபகம்.
நடந்திரப்பது என்னவென்று மீண்டும் நான் நடுவாசலில் நீண்டு கிடந்த நாகப் பாம்பைப் பார்த்தேன்.
அதைக் கொல்கிற கிளர்ச்சிக்கோ இன்பத்துக்கோ இல்லையெனினும் முன்னெச்சரிகையாகவோ அனிச்சையாகவோ செய்திருந்தாலும் கொலை கொலைதான்.
அன்னியோன்னியமும் பரிகாசமும் கிண்டலும் சூழ்ந்திருந்த உல்லாசமான ஒரு நிலா வெளிச்ச நேரம் சட்டென்று மாறி சபையெதிரே நடந்த வன்முறை ஒன்றுக்கு சாட்சிக்களமான மௌனம் அங்கு நிலவியது.
நான்தான் குற்றவாளியா? நான் மட்டுமா?
இளைய மைத்துனனைப் பார்த்தேன்.
அவன் தாக்குதலில்தான் பாம்பின் உயிர் பிரிந்திருக்கும்.
அவனுக்கும் இதில் பங்கு உண்டு.
அவன் அடித்தது எதிர்வினை. என் தாக்குதல் தூண்டிய அனிச்சை வேகம்.
எங்குமே முதலில் தாக்குகிறவன்தான் குற்றவாளி. அவன்தான் பிறரைத் தூண்டுகிறான்.
“அடிக்காம விட்டிருந்தா அது பழங் கடத்துக்கா போயி சுருண்டுக்கிட்டு ஒரே கலவரம் பண்ணியிருக்கும்.” என் மூத்த மைத்துனர் என் முதல் உதவிக்கு வந்தார்.
என் மீது அவருக்கு நேசம் அதிகம். அது மட்டுமல்ல. கண்டிப்பும் கண்டனமும் இறுக்கி, மூச்சு முட்டுகிற நிலையில் உள்ள எந்த ஆத்மாவின் மீதும் அதற்கு ரட்சண்ணியம் வழங்குகிற நேசம் அவருடைய ‘டிரேட் மார்க்.’
“பாம்பு! அடித்தாயிற்று. விட்டுவிடு. டேக் இட் ஈஸி. ஒரு விபத்து. ஓக்கே... தட்ஸ் ஆல்... வி காண்ட் ஹெல்ப் இட்.”
வேறு யாராவது பாம்பை அடித்து விட்டு உழப்பிக் கொண்டிருந்தால் நான்தான் இப்படிக் கவசம் வழங்குவேன்.
ஆனால் அடித்திருப்பது நான்!
சிற்சில கொசுக்கள்... மூட்டைப் பூச்சிகள்... சில எலிகள் தவிர இதுவரை நான் எந்தக் கொலைகளையும் செய்ததில்லை.
எலிகளை அடித்த பிறகு மிகவும் வேதனைப்பட்டிருக்கிறேன்.
சாதுவான நாகப்பாம்பு என்பதே எனக்கு ஒரு புதிய விநோதம்! ஏற்கெனவே சொல்லி விட்டேனே... பாம்புகளுக்கும் எனக்குமுள்ள தொடர்பில் எந்தச் சிக்கலுமில்லை. குறுக்கீடுமில்லை.
அவற்றின் வழி அவற்றுக்கு.
என் வழி எனக்கு.
இதுதான் என் முதலாவது அத்துமீறல். எலி, கொசு, மூட்டை நீங்கலான இதர உயிர்க் குலம் முழுமைக்கும் எதிரான என் முதல் வன்முறை இதுதான்.
“என்ன செய்யலாம்?” என்று பலவீனமாகக் கேட்டேன்.
“பாம்பைத் தூக்கிட்டுப் போய் புளிய மரத்தடியிலே தகனம் பண்ணிடணும்” என்றார் மாமனார்.
“நாளைக் கார்த்தாலே அந்த இடத்தில் கொஞ்சம் பால் வார்த்துடணும்” என்று மாமியார் தொடர்ந்தார்.
நாக தோஷத்துக்கு என்ன பண்றது?” கவலையோடு என் மனைவி குறுக்கிட்டாள்.
“எல்லம்மா கோவில் புத்துலே முட்டையும் பாலும் ஊத்தி, வெள்ளியிலே நாக உரு வாங்கிப் போடறதா வேண்டிக்கோ.”
மாமியார் வேண்டுதல்களிலும் பிராயச்சித்தங்களிலும் அதிக நம்பிக்கை உள்ளவர்.
அது ஒரு வாக்கு மாதிரி என் மனைவி முகத்தில் சற்று நிம்மதி வரவழைத்தது.
மாமனார் யோசனைப்படி கரும்புச் சோகையும் செத்தை சருகுகளும் மாங்குச்சிகளும் வழியோரப் புளியமரத்தின் கீழிருந்த மண் திடலில் குவிந்தன.
நாகப் பாம்பைத் தான் அடித்த மூங்கில் கழியில் வயிற்றுப் பக்கமாக நுழைத்து, இருபுறமும் தலையும் வாலும் எதிரெதிரே தொங்க இளைய மைத்துனன் எடுத்துச் சென்றான்.
இறுதி மரியாதை செலுத்துவது போல் எல்லோரும் எழுந்து வந்தனர். அக்கம் பக்கத்து வாண்டுகளுக்கு அதற்குள் செய்தி பரவி விட்டதால் அவை ஒரு சிறு கூட்டம்.
பாம்பை மத்தியில் கிடத்தி சோகையும், சருகுகளும் குச்சிகளும் சுற்றிலும் போடப்பட்டன.
கொஞ்சம் கெரஸின் தோய்ந்த கந்தல் ஒன்று கொண்டு வந்தார்கள்.
“மாப்பிள்ளே... நீங்க தீ வையுங்க” மாமனார் உத்தரவிட்டார்.
முதல் மைத்துனி தீப்பெட்டியை நீட்டினாள்.
நான் குச்சியை உரசினேன். கொழுந்தைக் கந்தல் துணி மீது வைத்தேன்.
தீ பரவத் தொடங்கியது.
பாம்பின் உடல் பஸ்பமாகிறதைப் பார்க்கிற பொறுமையோ, மன உறுதியோ இல்லாததால் உடனே நான் அந்த இடத்திலிருந்து அகன்று விட்டேன்.
என் பின்னாலேயே மூத்த மைத்துனர் வந்தார். என் மனோநிலைக்கு மாற்று சிகிச்சை தருகிற உத்தேசத்தோடு.
“மச்சான்! இது ஜீவ ஹிம்சைதான்... இல்லே!” எதிர்மறையாகவே நான் கேள்வி போட்டேன்.
“வெறும் விபத்து. பாதுகாப்பு உணர்விலே ஏற்பட்ட ஒரு வேகம்.” அவர் சாந்தமாக பொன் நிறுப்பது போல் வார்த்தைகளை அளந்து போட்டார்.
“அது என்னை ஒண்ணும் செய்ய வரலியே?” மீண்டும் என்னை உளைத்து அரிக்கும் ஆதங்கத்தோடு நான் கேட்டேன்.
அந்தக் கேள்வியைக் கேட்கும்போது என்னைக் குற்றத்திலிருந்து விடுவிக்கிற அதிகாரமும், மீண்டும் என்னை பழைய மனிதனாக அங்கீகரிக்கிற உரிமையும் அவரிடம் உண்டு என்பது போல் எனக்குத் தோன்றியது.
“உத்தேசத்தில் குற்றம் இல்லேன்னா இந்த உயிர் நஷ்டத்திலேயும் பெரிய தீமை இல்லை. ராஜய்யா கௌரவமாக மரணமடைந்தது.”
“அப்பவும் உயிர் நஷ்டம்தானே?”
கேட்டிருக்கக் கூடாது. கேட்ட பிறகுதான் எவ்வளவு சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றுகிறது.
உயிர்கள் நஷ்டப்படுவதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள், இந்தக் காலத்தில்? சுத்த அசட்டுத்தனம். இப்படியெல்லாம் உழப்பிக் கொள்வதிலேயே புரியவில்லை? அப்புறம் நானே வேறு என் மீது ‘லேபிள்’ ஒட்டிக் கொள்ள வேண்டுமா?
மைத்துனர் பரிவாகச் சிரித்தார்.
“ம்ம்... நாம என்ன செய்யறது? அதுக்கு அவ்வளவு தான் விதி.”
மறுநாள் பாம்பின் பிரேத சமஸ்காரம் நடந்த இடத்தில் பால் வார்க்கும்போது இளைய மைத்துனன் என் காதருகில் கிசுகிசுத்தான்.
“என் அடியிலே தான் மாமா அது உயிர் போச்சு!”
எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
“அப்ப நேத்திக்கே நீ அதைச் சொல்ல வேண்டியதுதானே!” என்று சீறினேன்.
“நீங்க ஏன் மாமா சொல்லலே?” அவன் மடக்கினான்.
ஆமாம். ஏன் குற்றப்பங்கை முழுமையாக நானே ஏற்றுக் கொண்டேன்?
இளைய மைத்துனன் மீது அந்த நேரத்தைய குடும்ப கோபமோ, திரஸ்காரமோ படியத் தேவையில்லை என்று தானே? மாமனார் வீட்டில் மைத்துனனைக் குற்றவாளியாக்கிவிடக் கூடாது என்ற கனிவா?
நான் மிருகாபிமானியா... மனிதாபிமானியா? நான் ஹெமிங் வேயிடம் மானசீகமாகக் கேட்டேன். சந்தேகம் வலுத்தது.
இதைப் போன்ற ஐயங்களை விடுவிப்பதில் வல்லவள் என் மனைவிதான். கேட்டேன்.
“முகரக்கட்டை” என்று தீர்ப்பளித்தாள்.