அடித்துக் கொல்வதற்கு முன்பு அந்த நாகப் பாம்பை நான் பார்த்ததில்லை.
என் மனைவி, மாமனார், மாமியார், இரு மைத்துனர்கள், மூன்று மைத்துனிகள்... இவர்கள் தவிர, வயல் வரப்பின் மேல் நடந்து, அந்தக் கொல்லையைக் கடந்து செல்லும் அனேகர் பார்த்திருக்கிறார்கள். அடிக்கடி இங்கே கூட உலவுமாம். நான் பார்வையைச் சுழற்றினேன்.
ஒரு புறம் ஓடுகளும் எதிரில் மஞ்சள் புல்லும் வேய்ந்த எதிரெதிர் வீடுகளுக்கு இடைப்பட்ட முற்றத்து வாசலில் நிலா ஒளி பொழிந்து கொண்டிருந்தது.
சுற்றிலும் எல்லாரும் ஒரு வட்டம் அமைத்தது போல் சூழ்ந்திருக்க, நடுவில், வாலின் மையத்தில் அடிபட்டு மாண்டிருந்தது பாம்பு.
உயிரின் இறுதிச் சலனமாக பாம்பின் வால் நுனி ஏதோ ஒரு முடிச்சைப் போட்டு அவிழ்ப்பது போல் சுருண்டு நெளிந்து, மீண்டும் நிமிர்ந்து முறுக்கியது.
“அடடே... இது நம்ம ராஜய்யா இல்லே?”
கூட்டத்தின் சுவாரஸ்யம் கட்டிக் காத்த மௌனத்தை முதலில் கலைத்தவர் என் மாமியார்.
என் மாமனார் வலது கையை மூன்று விரல்களும் நீட்டி, தரையில் பதிய இடக் காலை முழந்தாளிட்டு மடக்கி, சற்று நெருங்கி வந்தார்.
அவர் பார்வை பாம்பின் மீது சிறிது நேரம் தங்கியது.
“ஆமா... ராஜய்யன் தான்!”
அவர் ஆமோதித்தார்.
“ஐயையோ...”
எனது முதல் மைத்துனி.
தொடர்ந்து, கூடியிருந்தவர் மத்தியில் ஒரு சலனம். அனுதாப அலை.
“ஏழெட்டு வருஷமா நம்ப புங்க மரத்தடியிலேதான் இருக்கு. யாருக்கும் எந்தக் கெடுதலும் இதுவரைக்கும் செஞ்சதில்லே.” என் மனைவி.
“வீட்டைச் சுத்தி வரும். போவும். நான் எத்தனையோ நாள் பார்த்திருக்கேன்.” இரண்டாம் மைத்துனி.
அடுத்து மாமனார் என்ன சொல்லப் போகிறாரோ என்று கிட்டத்தட்ட ஒரு கொலையாளியின் குற்ற உணர்வோடு என் செவிகள் குறுகுறுத்தன.
அவர் என்னை ஒரு தரம் பார்த்துவிட்டு பாம்புக்கு மாறினார்.
“நீ ஏண்டா இந்தப் பக்கம் வந்தே?” முதலில் தூக்கி வாரிப் போட்டது. இல்லை... என்னையல்ல...
இறுகி உயிர் மூச்சை விட்டு நிர்ச்சலனமாகி விட்ட நாகப்பாம்பைப் பார்த்து செய்யத் தகாத ஒரு செய்கையால் உயிரிழந்து விட்ட நெருக்கமான சினேகிதன் ஒருவரைக் கேட்பது போல் கேட்டார்.
எனக்குள் நச்சென்று பிடரியில் ஓர் அடி.
ஆக இது கொலைக் குற்றம்தான்.
“நாகப் பாம்பை அடிக்கக் கூடாதே!” அடுத்து மாமியார்.
“ஆமாம்... தெய்வக் குத்தமாச்சே.” மைத்துனி எண் மூன்று.
என் மனம் நடந்ததை மறுபரிசீலனை செய்தது.
சற்று நேரத்திற்கு முன் நெல் உலர்த்தும் களத்திலிருந்து சிறு சிமெண்டுப்படி ஏறி பழங்கலம் வைத்திருக்கும் பண்டபாத்திர அறைக்குள் நுழைவதை ஒரே லட்சிய நோக்காக வைத்துக் கொண்டிருப்பது போல் அது சரசரவென்று ஊர்ந்து வந்தது.
உடனே கவனித்தது நான். அடுத்து என் இளைய மைத்துனன்.
நிலா வெளிச்சத்தில் நான் கரும்புத் துண்டு ஒன்றைக் கடித்துக் கொண்டிருந்தேன்.
பக்கத்தில் என் சுவாரஸ்யம் நீடித்தால் வெட்டுப்படத் தயாராய் ஒரு நீண்ட கரும்புக் கிடை.
வாசல் ஒட்டி, அரையடி உயரத்தில் சிமெண்ட் நடையில் ஓட்டு வீட்டின் சார்ப்பாய் இறங்கிய ஓலைப் பந்தலின் மைய மரக் கழியில் சாய்ந்து கொண்டு என் இளைய மைத்துனன்.
அவரருகில் ஒன்றரையங்குல விட்டத்தில் புளியம் பழத்தின் மேலோடு நொறுக்கப் பயன்படும் மூங்கில் கழி. மூன்றடி நீளம்.
ராஜய்யா (என்ன பெயர் அது? ராஜநாகம் என்பதற்கான அடையாளக் குறியீடா... அல்லது எந்த ராஜய்யாவோ அந்தப் பாம்பு மாதிரி இருந்த ஞாபகார்த்தமா?) இந்த இரு ஆயுதச் சூழலின் இடையேதான் தன் இறுதி யாத்திரை மும்முரத்தில் வந்தது.
பாம்புகளுக்கு நான் பயன்படுவதில்லை. ஏனென்று தெரியாது. சுபாவம். மற்றபடி வீரதீரம் ஒன்றுமில்லை.
“மாமா... பாம்பு...” என்று இளைய மைத்துனன் கத்தினான்.
அவனும் பயந்து கத்தவில்லை. ஒரு வியப்பில்தான் கத்தினான். பார்த்தால் இரண்டு கைவீசிப் போடும் நீளத்தில் நிலாவொளியின் மினுமினுப்பில் ஒரு பாம்பு.
குரலோசைகளுக்கு தனி சக்திகள் உண்டு. டெஸிபல் மிகுந்தாலோ வேறு அதிர்வு மாற்றம் இருந்தாலோ நாம் துணுக்குறுகிறோம். நம்மை அவை ஸ்விட்ச் போட்டு இயக்கி விடுகின்றன.
தன்னிலை மீளுவதற்குள் அனிச்சையாகச் செயல்பட்டு விடுகிறோம்.
நான் இப்படிப்பட்ட பலவீனங்களுக்கு இரையாகிறவன்.
பக்கத்திலிருந்து கரும்புக் கிடையை எடுத்து ஊர்ந்து வந்த பாம்பின் நடு உடலின் மீது ஓங்கி அடித்தேன்.
குரலோசைகள் போன்றே செயல்பாடுகளுக்கும் ஒரு சக்தி உண்டு. ஒருவன் அடிக்கும் தீவிரம் பார்த்து மற்றவனுக்கு அதே வேலையைச் செய்ய ஓர் அனிச்சை உத்தரவு தோன்றிவிடும்.
வையவன் சிறுகதை
இரண்டில் எது தாக்கமான அடி என்பதை இப்போது என்னால் சொல்ல முடியவில்லை.
இரண்டில் எது தாக்கமான அடி என்பதை இப்போது என்னால் சொல்ல முடியவில்லை.
ஆனால் இளைய மைத்துனனின் அடி பாம்பின் தலை மீது விழுந்தது. அறிவு பூர்வமாக அதுதான் சரியான இலக்கு.
பாம்புகளை உடம்பில் அடித்தால் அது சீறித் திரும்பும் வாய்ப்பு உண்டு. அது அப்படித் திரும்பி இருந்தால் மீண்டும் நான் அறிவு பூர்வமாக இயங்கியிருக்கக் கூடும். முதல் வாய்ப்பைத் தவற விட்டபின் சொல்லும் சமாதானம்!
வாசலில் நிலா வெளிச்சத்தில் நான் உட்கார்ந்திருந்ததால் இரண்டு தாக்குதல்களில் என்னுடையது தான் எல்லார் கவனத்தையும் ஈர்த்திருக்கும். ஈர்த்தது.
அதனால்தான் குற்றத்தின் முழுப்பளுவும் என் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
ராஜய்யா எவ்வளவு சாது. எத்தனை ஆண்டுகளாக என் மாமனார் குடும்பத்தோடு அதற்குப் பரிச்சயம் என்ற விவரங்கள் நகரத்திலிருந்து சிறு இளைப்பாறுதல்களுக்காக கிராமத்து மாமனார் வீட்டிற்கு வரும் எனக்குத் தெரிய நியாயமில்லை.
அதையும் அவர்கள் அறிவார்கள்.
வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒரு நச்சுப் பாம்பைக் கொன்றதற்கு உரிய பாராட்டுதலுக்குப் பதில், ஒரு குடும்ப சாபத்திற்கு வழிவகுத்து விட்ட கொடூரச் செயலுக்கு நான் பொறுப்பான குற்றப் பத்திரிகை எல்லார் முகத்திலும் தென்பட்டது.
“நான்... எனக்கு ஒண்ணுமே தெரியாது. பாம்பு, பெண்டு பிள்ளைங்க இருக்கற வீட்டிலே நுழைஞ்சுடப் போவுதுண்ணு அடிச்சுட்டேன்...”
என்னை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றேன். நான் எதிர்பார்த்த தேற்றுதலோ... “அதுக்கென்ன செய்யலாம். அந்தப் பாம்பின் விதி’ என்ற சமாதானத்தையோ காணோம்.
எல்லோரும் மௌனம் காத்தனர்.
குறைந்தபட்சம் என் மனைவி? ஆபத்சகாயியான என் முதல் மைத்துனர்? ம்ஹூம். எவரும் அசைந்து கொடுக்கவில்லை.
அவளைப் பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்து என்னை ஒருமுறை
முறைத்தாள் என் மனைவி.
எனக்கு ஏனோ எர்னெஸ்ட் ஹெமிங்வே ஞாபகம் வந்தது. ‘டெத் இன் த ஆஃப்டர் நூனி’ல் மிருகங்கள் படும் வேதனைகளைப் பிரமாதப்படுத்துகிறவார்கள், மிருகாபிமானிகள். அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது!’ கிட்டத்தட்ட இப்படி ஏதோ சொன்ன ஞாபகம்.
நடந்திரப்பது என்னவென்று மீண்டும் நான் நடுவாசலில் நீண்டு கிடந்த நாகப் பாம்பைப் பார்த்தேன்.
அதைக் கொல்கிற கிளர்ச்சிக்கோ இன்பத்துக்கோ இல்லையெனினும் முன்னெச்சரிகையாகவோ அனிச்சையாகவோ செய்திருந்தாலும் கொலை கொலைதான்.
அன்னியோன்னியமும் பரிகாசமும் கிண்டலும் சூழ்ந்திருந்த உல்லாசமான ஒரு நிலா வெளிச்ச நேரம் சட்டென்று மாறி சபையெதிரே நடந்த வன்முறை ஒன்றுக்கு சாட்சிக்களமான மௌனம் அங்கு நிலவியது.
நான்தான் குற்றவாளியா? நான் மட்டுமா?
இளைய மைத்துனனைப் பார்த்தேன்.
அவன் தாக்குதலில்தான் பாம்பின் உயிர் பிரிந்திருக்கும்.
அவனுக்கும் இதில் பங்கு உண்டு.
அவன் அடித்தது எதிர்வினை. என் தாக்குதல் தூண்டிய அனிச்சை வேகம்.
எங்குமே முதலில் தாக்குகிறவன்தான் குற்றவாளி. அவன்தான் பிறரைத் தூண்டுகிறான்.
“அடிக்காம விட்டிருந்தா அது பழங் கடத்துக்கா போயி சுருண்டுக்கிட்டு ஒரே கலவரம் பண்ணியிருக்கும்.” என் மூத்த மைத்துனர் என் முதல் உதவிக்கு வந்தார்.
என் மீது அவருக்கு நேசம் அதிகம். அது மட்டுமல்ல. கண்டிப்பும் கண்டனமும் இறுக்கி, மூச்சு முட்டுகிற நிலையில் உள்ள எந்த ஆத்மாவின் மீதும் அதற்கு ரட்சண்ணியம் வழங்குகிற நேசம் அவருடைய ‘டிரேட் மார்க்.’
“பாம்பு! அடித்தாயிற்று. விட்டுவிடு. டேக் இட் ஈஸி. ஒரு விபத்து. ஓக்கே... தட்ஸ் ஆல்... வி காண்ட் ஹெல்ப் இட்.”
வேறு யாராவது பாம்பை அடித்து விட்டு உழப்பிக் கொண்டிருந்தால் நான்தான் இப்படிக் கவசம் வழங்குவேன்.
ஆனால் அடித்திருப்பது நான்!
சிற்சில கொசுக்கள்... மூட்டைப் பூச்சிகள்... சில எலிகள் தவிர இதுவரை நான் எந்தக் கொலைகளையும் செய்ததில்லை.
எலிகளை அடித்த பிறகு மிகவும் வேதனைப்பட்டிருக்கிறேன்.
சாதுவான நாகப்பாம்பு என்பதே எனக்கு ஒரு புதிய விநோதம்! ஏற்கெனவே சொல்லி விட்டேனே... பாம்புகளுக்கும் எனக்குமுள்ள தொடர்பில் எந்தச் சிக்கலுமில்லை. குறுக்கீடுமில்லை.
அவற்றின் வழி அவற்றுக்கு.
என் வழி எனக்கு.
இதுதான் என் முதலாவது அத்துமீறல். எலி, கொசு, மூட்டை நீங்கலான இதர உயிர்க் குலம் முழுமைக்கும் எதிரான என் முதல் வன்முறை இதுதான்.
“என்ன செய்யலாம்?” என்று பலவீனமாகக் கேட்டேன்.
“பாம்பைத் தூக்கிட்டுப் போய் புளிய மரத்தடியிலே தகனம் பண்ணிடணும்” என்றார் மாமனார்.
“நாளைக் கார்த்தாலே அந்த இடத்தில் கொஞ்சம் பால் வார்த்துடணும்” என்று மாமியார் தொடர்ந்தார்.
நாக தோஷத்துக்கு என்ன பண்றது?” கவலையோடு என் மனைவி குறுக்கிட்டாள்.
“எல்லம்மா கோவில் புத்துலே முட்டையும் பாலும் ஊத்தி, வெள்ளியிலே நாக உரு வாங்கிப் போடறதா வேண்டிக்கோ.”
மாமியார் வேண்டுதல்களிலும் பிராயச்சித்தங்களிலும் அதிக நம்பிக்கை உள்ளவர்.
அது ஒரு வாக்கு மாதிரி என் மனைவி முகத்தில் சற்று நிம்மதி வரவழைத்தது.
மாமனார் யோசனைப்படி கரும்புச் சோகையும் செத்தை சருகுகளும் மாங்குச்சிகளும் வழியோரப் புளியமரத்தின் கீழிருந்த மண் திடலில் குவிந்தன.
நாகப் பாம்பைத் தான் அடித்த மூங்கில் கழியில் வயிற்றுப் பக்கமாக நுழைத்து, இருபுறமும் தலையும் வாலும் எதிரெதிரே தொங்க இளைய மைத்துனன் எடுத்துச் சென்றான்.
இறுதி மரியாதை செலுத்துவது போல் எல்லோரும் எழுந்து வந்தனர். அக்கம் பக்கத்து வாண்டுகளுக்கு அதற்குள் செய்தி பரவி விட்டதால் அவை ஒரு சிறு கூட்டம்.
பாம்பை மத்தியில் கிடத்தி சோகையும், சருகுகளும் குச்சிகளும் சுற்றிலும் போடப்பட்டன.
கொஞ்சம் கெரஸின் தோய்ந்த கந்தல் ஒன்று கொண்டு வந்தார்கள்.
“மாப்பிள்ளே... நீங்க தீ வையுங்க” மாமனார் உத்தரவிட்டார்.
முதல் மைத்துனி தீப்பெட்டியை நீட்டினாள்.
நான் குச்சியை உரசினேன். கொழுந்தைக் கந்தல் துணி மீது வைத்தேன்.
தீ பரவத் தொடங்கியது.
பாம்பின் உடல் பஸ்பமாகிறதைப் பார்க்கிற பொறுமையோ, மன உறுதியோ இல்லாததால் உடனே நான் அந்த இடத்திலிருந்து அகன்று விட்டேன்.
என் பின்னாலேயே மூத்த மைத்துனர் வந்தார். என் மனோநிலைக்கு மாற்று சிகிச்சை தருகிற உத்தேசத்தோடு.
“மச்சான்! இது ஜீவ ஹிம்சைதான்... இல்லே!” எதிர்மறையாகவே நான் கேள்வி போட்டேன்.
“வெறும் விபத்து. பாதுகாப்பு உணர்விலே ஏற்பட்ட ஒரு வேகம்.” அவர் சாந்தமாக பொன் நிறுப்பது போல் வார்த்தைகளை அளந்து போட்டார்.
“அது என்னை ஒண்ணும் செய்ய வரலியே?” மீண்டும் என்னை உளைத்து அரிக்கும் ஆதங்கத்தோடு நான் கேட்டேன்.
அந்தக் கேள்வியைக் கேட்கும்போது என்னைக் குற்றத்திலிருந்து விடுவிக்கிற அதிகாரமும், மீண்டும் என்னை பழைய மனிதனாக அங்கீகரிக்கிற உரிமையும் அவரிடம் உண்டு என்பது போல் எனக்குத் தோன்றியது.
“உத்தேசத்தில் குற்றம் இல்லேன்னா இந்த உயிர் நஷ்டத்திலேயும் பெரிய தீமை இல்லை. ராஜய்யா கௌரவமாக மரணமடைந்தது.”
“அப்பவும் உயிர் நஷ்டம்தானே?”
கேட்டிருக்கக் கூடாது. கேட்ட பிறகுதான் எவ்வளவு சிறுபிள்ளைத்தனம் என்று தோன்றுகிறது.
உயிர்கள் நஷ்டப்படுவதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள், இந்தக் காலத்தில்? சுத்த அசட்டுத்தனம். இப்படியெல்லாம் உழப்பிக் கொள்வதிலேயே புரியவில்லை? அப்புறம் நானே வேறு என் மீது ‘லேபிள்’ ஒட்டிக் கொள்ள வேண்டுமா?
மைத்துனர் பரிவாகச் சிரித்தார்.
“ம்ம்... நாம என்ன செய்யறது? அதுக்கு அவ்வளவு தான் விதி.”
மறுநாள் பாம்பின் பிரேத சமஸ்காரம் நடந்த இடத்தில் பால் வார்க்கும்போது இளைய மைத்துனன் என் காதருகில் கிசுகிசுத்தான்.
“என் அடியிலே தான் மாமா அது உயிர் போச்சு!”
எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
“அப்ப நேத்திக்கே நீ அதைச் சொல்ல வேண்டியதுதானே!” என்று சீறினேன்.
“நீங்க ஏன் மாமா சொல்லலே?” அவன் மடக்கினான்.
ஆமாம். ஏன் குற்றப்பங்கை முழுமையாக நானே ஏற்றுக் கொண்டேன்?
இளைய மைத்துனன் மீது அந்த நேரத்தைய குடும்ப கோபமோ, திரஸ்காரமோ படியத் தேவையில்லை என்று தானே? மாமனார் வீட்டில் மைத்துனனைக் குற்றவாளியாக்கிவிடக் கூடாது என்ற கனிவா?
நான் மிருகாபிமானியா... மனிதாபிமானியா? நான் ஹெமிங் வேயிடம் மானசீகமாகக் கேட்டேன். சந்தேகம் வலுத்தது.
இதைப் போன்ற ஐயங்களை விடுவிப்பதில் வல்லவள் என் மனைவிதான். கேட்டேன்.
“முகரக்கட்டை” என்று தீர்ப்பளித்தாள்.

No comments:
Post a Comment